சபா, செப் 9 – சபா அடையாள அட்டை விவகாரத்தில் கடந்த 1986 ஆம் ஆண்டு தாம் முன்னாள் துணை உள்துறை அமைச்சர் மெகாட் ஜூனிட் மெகாட் ஆயுப்பை சந்திக்கவில்லை என்றும், அவரிடமிருந்து அது தொடர்பாக எந்தத் தகவலையும் பெறவில்லை என்றும் முன்னாள் கூட்டரசு துணையமைச்சர் யாஹ்யா லாம்போங் தெரிவித்துள்ளார்.
இன்று சபா அரச விசாரணை ஆணையத்திடம் (Royal commission of inquiry) சாட்சியமளித்த அவர், மெகாட் ஜுனிட் ஒரு நேர்மையான மனிதர். அவர் சபா அடையாள அட்டை விவகாரத்தில் தலையிட்டிருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
“இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை. காரணம் இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் நான் பெர்ஜெயா கட்சியில் இருந்து விலகி விட்டேன். புதிய வாக்காளர்களை சேர்க்க நான் திட்டமிட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை. நான் அதில் சம்பந்தப்படவில்லை” என்று யாஹ்யா தெரிவித்துள்ளார்.
ஹாஸ்னார் இப்ராஹிம் என்பவர் ஆர்சிஐ யிடம் அளித்த சாட்சியில், 1986 ஆம் ஆண்டு தானும் யாஹ்யாவும் மெகாட் ஜுனிட்டைச் சந்தித்து அடையாள அட்டை தொடர்பாக தகவல் பெற்றதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், தன் மீதும், மெகாட் ஜுனிட் மீதும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய ஹாஸ்னார் மீது வழக்குத் தொடுக்கப் போவதாக யாஹ்யா கூறியுள்ளார்.