Home நாடு “ஸ்ருதி அம்மா மாதிரி – லயம் அப்பா மாதிரி” – ‘லாஸ்யா ஆர்ட்ஸ் அகாடமி’ நிறுவனர்...

“ஸ்ருதி அம்மா மாதிரி – லயம் அப்பா மாதிரி” – ‘லாஸ்யா ஆர்ட்ஸ் அகாடமி’ நிறுவனர் குருவாயூர் உஷா துரையுடன் நேர்காணல்

2487
0
SHARE
Ad

IMG_7385செப்டம்பர் 10 –  நாம் அந்த வீட்டிற்குள் நுழைந்த போது, கையில் தம்புராவோடு அமர்ந்திருந்தார் திருமதி குருவாயூர் உஷா துரை. பிண்ணனியில் மனதை லயிக்கும் மெல்லிசை ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் தலைச்சிறந்த மிருதங்க வித்துவான்களில் ஒருவரான ‘கலைமாமணி’ குருவாயூர் துரை அவர்களின் ஒரே மகள். இசைக்காகவும், கலைக்காகவும் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த ஒரு இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவர்.

சிறுவயதில் தனது சொந்த அத்தையான பிரபல கர்நாடக இசைப் பாடகி குருவாயூர் பொன்னம்மாளிடம் முறைப்படி சங்கீதம் கற்ற உஷா துரை, அதன்பிறகு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களிடம் சங்கீதத்தில் மேலும் பல நுணுக்கங்களை கற்றுத் தெரிந்துகொண்டார்.

பரத நாட்டியத்தின் மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக ஸ்ரீ பண்டாநல்லூர் ஸ்ரீனிவாச பிள்ளை அவர்களிடம் தொடக்க நிலை நாட்டியம் கற்று, மகாகுரு ஸ்ரீமதி இந்திரா ராஜன் மற்றும் இசைமேதை செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அவர்களின் “வாதினி நாட்யாலயா” பள்ளியில் பரதநாட்டியத்தில் டிப்ளமா பட்டம் பெற்றவர்.

#TamilSchoolmychoice

சிங்கப்பூர் கலா மந்திர் (Temple of Fine Arts) ல் ஆசிரியையாக தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய உஷா துரை, மலேசியாவில் ‘லாஸ்யா ஆர்ட்ஸ் அகாடமி’ என்ற இசை மற்றும் நாட்டியப் பள்ளியை தொடங்கி, அதன் மூலம் கடந்த 20 வருடங்களாக எத்தனையோ மாணவர்களுக்கு கர்நாடக சங்கீதம் மற்றும் நாட்டியம் கற்றுக்கொடுத்து கலையுலகில் அவர்களது வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருபவர்.

சங்கீதம், நாட்டியம், மிருதங்கம், தபலா, வீணை என அத்தனையிலும் மேதையான உஷா துரை ஆஸ்ட்ரோ, மின்னல், ஆர்டிஎம் போன்ற உள்ளூர் தொலைக்காட்சி, வானொலிகளில் பல இசை நிகழ்ச்சிகளைப் படைத்திருக்கிறார். அதோடு, ‘தீப ஊர்வலம்’ என்ற மலேசிய குறும்படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் திரையுலகிலும் தற்போது கால் பதித்திருக்கிறார்.

இத்தகைய சிறப்புகளையுடைய உஷா துரையுடன் நமது செல்லியல் நடத்திய நேர்காணல் இதோ…

செல்லியல்: உங்களது இசைப் பயணம் பற்றி?

உஷா துரை : இசைப் பயணம் நான் என் அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே தொடங்கிவிட்டது என்று நினைக்கிறேன். காரணம் எப்போதும் எங்கள் வீட்டில் சங்கீதம் ஒலித்துக்கொண்டே இருக்கும். அப்பா, அத்தை, சித்தப்பா என்று எல்லோருமே சங்கீத மேதைகள்.

ஆனால் என் தாத்தா காலத்தில் இந்த சங்கீதமெல்லாம் இல்லை. அவர் ஒரு வைதீக பிராமணர். கேரளா குருவாயூர் அந்த காலத்தில் ஒரு சிறிய கிராமமாகத் தான் இருந்தது. அங்கு ஒரு பெண் சங்கீதம் பாடுகிறாள் என்றால் அது மகாப் பாவம் என்று சொல்லக்கூடிய காலகட்டம் அது. அப்படிப்பட்ட காலத்தில் என் அத்தை சங்கீதம் கற்று பாடத் தொடங்கினார். அதன் பின் எனது அப்பா மிருதங்கத்தின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக முறைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார். அதன் மூலம் என் அத்தையும், அப்பாவும் இசைத்துறையில் புகழடைந்தார்கள்.

அவர்களுக்குப் பின் நான் எனது 6 வயதில் பாடத்தொடங்கினேன். அந்த சமயத்தில் நாட்டியத்தின் மீது ஈர்ப்பு எனது மூன்றாவது வீட்டில் இருந்து வந்தது. நாங்கள் இருந்த வீட்டிற்கு அடுத்து 3 வீடுகள் தள்ளி நாட்டிய டீச்சர் ஒருவர் இருந்தார் அவர் மூலமாக எனக்கும் நாட்டியத்தின் மீது ஈடுபாடு வந்தது.

“Music is derived from sama vedha” என்று சொல்லுவா. நாம் மந்திரங்களை உச்சரிக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் நமது மனம் மற்றும் செயலை ஒருவழிப்படுத்துகிறது. அதுபோல தான் இசை மற்றும் நாட்டியமும் அந்த கலைக்கு மரியாதை கொடுத்து அதை முறையாகப் படித்து தெரிந்துகொண்டால் நமக்கு அது வசப்படும்.

DSC_0884செல்லியல்: சங்கீதம் கற்றல் கற்பித்தல் அன்றைய காலத்திற்கும், இன்றைக்கும் உள்ள வேறுபாடு?

உஷா துரை: புராண காலத்தில் மனோதத்துவ முறைப்படி தான் சங்கீதம் கற்றுக்கொடுக்கப்பட்டது. அதன் பிறகு புரந்திர தாசர் என்பவர் தான் முதல் முதலாக Systematic Discipline என்ற முறைப்படி சங்கீதம் கற்றுக் கொடுப்பதற்கு குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்தார்.

என்னைப் பொறுத்தவரை அது போல் குறிப்புகள் கொடுப்பது தவறு என்று தான் நினைக்கிறேன். நான் படித்தது எல்லாம் மனோதத்துவ முறைப்படி தான். குரு பாடுவார் அதை பின் தொடர்ந்து நாங்கள் பாடுவோம்.

குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்த போது கூட, ஒரு தாளில் அந்தப் பாட்டை எழுதிக் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள். நாம் அதைப் பாடிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் வந்து பாடச் சொல்லி கேட்டுவிட்டு அந்த தாளை கிழித்துப் போட்டுவிடுவார்கள்.

இப்போது அப்படி இல்லை. குறிப்பு கிடைத்தால் போதும் என்றும் நினைக்கிறார்கள். சங்கீதத்தில் ஸ்ருதி என்பது அம்மா மாதிரி, லயம் என்பது அப்பா மாதிரி. இவை இரண்டுமே சரியாக அமைய வேண்டும்.  ‘ஸ்ருதி மாது லய பிதக’ இதைத் தான் முதல் வகுப்பில் சொல்லித் தருவோம். இதை உணர்ந்து கற்றவர்கள் தான் மிகப் பெரிய சங்கீத மேதைகளாக உருவாகியிருக்கிறார்கள்.

IMG_5979செல்லியல்: சங்கீதம் கற்றுக்கொள்ளவரும் இன்றைய தலைமுறையினர் பற்றி?

உஷா துரை: குரல் வளம் என்பது இறைவன் கொடுத்தது. எல்லாருக்கும் அது அமையாது. பிறப்பில் இருந்தே தானாக வருவது ஒரு விதம் என்றால் கடும் முயற்சிகள் செய்து வரவழைப்பது இன்னொரு விதம். குழந்தைகளிடம் ஆரம்பத்திலேயே நல்ல குரல்வளத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்களிடம் கடுமையான முயற்சிகளையும், பயிற்சிகளையும் எதிர்பார்க்கிறேன்.

இங்கு சங்கீதம் கற்க வருபவர்களிடம் அத்தகைய கடினமான முயற்சி இல்லை. அது இருந்தால் சங்கீதத்தை நல்ல முறையில் கற்கலாம்.

கற்பனைத்திறன் வேண்டும் பிள்ளைகளுக்கு… அதனால் தான் எழுவதற்கு நிறைய பயிற்சிகள் கொடுப்பேன். உதாரணமா ப்பாபபபா… ம்மாமமம ரி கரிசா… (பாடுகிறார்) இதுல கா எங்க ரி எங்கன்னு பிள்ளைகளுக்கு தெரிய வேண்டாமா?

அதனால் பெற்றோர்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால்.. உங்கள் பிள்ளைகள் பாட வேண்டும் என்று நீங்கள் ஆசைப் படுவதில் தவறில்லை. அவர்களைப் பாட வைப்பதில் டீச்சருக்கு என்ன பங்கு உள்ளதோ அதே போல் உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது.

இன்று சங்கீதத்தில் சேர்த்து விட்டு அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரங்கேற்றம் பண்ண வேண்டும். சினிமாவில் பாட வைக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.

செல்லியல்: இன்றைய காலத்தில் சங்கீதம் கேட்பவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

உஷா துரை: சங்கீதக் கச்சேரிகளில் வந்து பாடகர்களை சினிமாப் பாடல்களை பாடச் சொல்லிக் கேட்கும் மனநிலையில் தான் மக்களின் ரசனை இருக்கிறது. எங்களது காலத்தில் சினிமா பார்ப்பது அரிது. ஒரு பாட்டை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கச்சேரிகளுக்குத் தான் போக வேண்டும். அப்படி ஒவ்வொரு கச்சேரிக்கா போய் தான் நான் பல பாடல்களைக் கற்றுக்கொண்டேன்.

ஆனால் இப்ப இருக்குற விஞ்ஞான வளர்ச்சியில் கையில் உங்களது உலகம் இருக்கிறது. அதில் பிடித்த பாட்டையோ அல்லது கச்சேரியையோ உடனுக்குடன் கேட்கலாம். அப்படி இருந்தும் சிறு குழந்தைகளையும் சினிமா மோகம் ஆட்டிப்படைக்கிறது.

டீச்சர் யூடியூப் பார்த்தீங்களா 3 வயது பிள்ளை ‘கொலவெறி’ பாடலைப் பாடுகிறது என்று ஒருவர் என்னிடம் சொன்னார். கொலவெறி என்னங்க நீங்க போட்டா ‘சௌந்தர்யலகரி’ கூட பாடும். நீங்க ஒரு ஜப்பான் மொழி பாடலை

தினம் போட்டாலும் அந்த குழந்தை பாடும். நீங்க அந்த குழந்தைகளுக்கு என்ன தருகிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் அதன் திறமை அமையும்.

IMG_7418செல்லியல்: உங்கள் கணவர் மற்றும் குழந்தைகள் எந்த அளவு உங்களது கலைக்கு ஆதரவு தருகிறார்கள்?

உஷா துரை: எனது கணவரும், குழந்தைகளும் எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால் நான் இந்த அளவிற்கு ஆளாகி இருக்க முடியாது. நான் இந்த நாட்டிற்கு வந்து 23 வருடங்களாகி விட்டது. இன்றுவரை எனக்கு முழு ஆதரவாகவும், உறுதுணையாகவும் எனது கணவரும் குழந்தைகளும் இருந்து வருகிறார்கள்.

செல்லியல்: உங்களது எதிர்காலக் கனவு?

உஷா துரை: என்னிடம் சங்கீதம் கற்றுக் கொள்ள வரும் குழந்தைகள் தான் எனது கனவு. ஸ்ருதி ஜெயசங்கர் எனது கனவு மாணவியாக இருந்தாள். நான்கரை வயதில் என்னிடம் அவள் வரும் போது அவளது ஞானமே வேறு மாதிரி இருந்தது. அவளை வைத்து பல பரிசோதனைகள் செய்து பார்த்திருக்கிறேன்.

அவளைப் போன்ற பல மாணவிகளை உருவாக்க வேண்டும். இங்குள்ள தமிழ்ப் பள்ளிகள் அனைத்திலும் இசையை ஒரு பாடமாகக் கொண்டுவர வேண்டும் அதுவே எனது கனவு.

இவ்வாறாக திருமதி குருவாயூர் உஷா துரை அவர்களுடனான நேர்காணல் முடிந்தது. ஒரு சங்கீத மேதையை நேர்காணல் செய்துவிட்டு அவர் குரலில் ஒரு பாடலைக் கேட்காமல் வருவோமா? எனக்கு மிகவும் பிடித்த, என் அன்னை அடிக்கடி ஸ்ருதி சுத்தமாகப் பாடும் அந்த ‘அலைபாயுதே கண்ணா’ பாட்டை பாடும் படி உஷா அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.

என்னை ஆச்சர்யமாகப் பார்த்தவர். ஆலாபனையோடு பாட்டைத் தொடங்கினார். இப்போது வரை அந்த கணீர் குரல் என் செவிகளை விட்டு அகலவில்லை.

பீனிக்ஸ்தாசன்