Home அரசியல் “கைது நடவடிக்கைகள் குறித்து கணக்கு காட்டினால் மட்டும் போதாது” – சுரேந்திரன் சாஹிட்டுக்கு பதிலடி

“கைது நடவடிக்கைகள் குறித்து கணக்கு காட்டினால் மட்டும் போதாது” – சுரேந்திரன் சாஹிட்டுக்கு பதிலடி

668
0
SHARE
Ad

N-Surendranகோலாலம்பூர், செப் 10 – குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதாக சிலரைக் கைது செய்து கணக்கு காட்டினால் மட்டும் போதுமா? காவல்துறை தங்களைப் பலப்படுத்திக் கொண்டு தொடர்ந்து குற்றங்களை ஒழிக்கப் போராட வேண்டும் என்று பிகேஆர் உதவித் தலைவர் சுரேந்திரன்(படம்) உள்துறை அமைச்சர் சாஹிட்டின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று காலை சுரேந்திரன் விடுத்த அறிக்கையில், எதிர்வரும் அம்னோ தேர்தலை முன்வைத்து தான் உள்துறை அமைச்சர் சாஹிட் இது போன்ற குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது போல் விளம்பரங்கள் செய்துகொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

சுரேந்திரன் அறிக்கை விடுத்த அடுத்த சில மணி நேரங்களில் பதிலறிக்கை விடுத்த சாஹிட், தனக்கு அது போன்ற மலிவு அரசியல் விளம்பரம் தேவையில்லை என்றும், ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கைகள் நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தான் சொல்வது எதிர்கட்சியைச் சேர்ந்த அந்த தலைவருக்குப் புரியவில்லை என்றால், “அவர் மீண்டும் பள்ளிக்கு கல்வி கற்க போக வேண்டும்” என்று சாஹிட் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்று மீண்டும் அறிக்கை விடுத்துள்ள சுரேந்திரன், “அதிக எண்ணிக்கையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே தவிர அவர்கள் அனைவர் மீதும் வழக்கு போட்டதாகத் தெரியவில்லை”

“இத்தனை பேரை கைது செய்துள்ளோம் என்று சொன்னால் மட்டும் குற்றங்கள் குறைந்துவிடுவதில்லை. எனவே சாஹிட் இது போன்ற அரசாங்கத்திடமும், மக்களிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நோக்கில் கைது நடவடிக்கைகளை அறிவிப்பதை விடுத்து, மாறாக குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறையின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.