கோலாலம்பூர்: இந்த வார தொடக்கத்தில் கோலாலம்பூரில் குண்டர் கும்பல் உறுப்பினரின் இறுதி ஊர்வலம் தொடர்பாக காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காதது குறித்து உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் விளக்கமளித்துள்ளார்.
“இறுதி ஊர்வலத்தின் போது நாங்கள் நடவடிக்கை எடுப்பது பொருத்தமற்றதாக இருந்திருக்கும். இருப்பினும், நாங்கள் உடனடியாக செயல்பட்டோம். விசாரணை செய்யப்பட்டது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூரில் குண்டர் கும்பல் உறுப்பினரின் இறுதி ஊர்வலம் தொடர்பாக ஐந்து பேரை காவல் துறையினர் தடுத்து வைத்தனர். ஊர்வலத்தின் போது பட்டாசுகளும் வெடிக்கப்பட்டது.
இறந்தவருக்கு வயது 28. ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் அவர் கொல்லப்பட்டார் என்பதை கோலாலம்பூர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக பிரிக்பீல்ட்ஸ் காவல் துறைத் தலைவர் அனுவார் ஒமர் தெரிவித்தார்.
இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு 18 முதல் 26 வயதுக்குட்பட்ட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்ததாகவும், பரிசோதனைகளில் பல வாகனங்களையும் பறிமுதல் செய்ததாகவும் அவர் கூறினார்.