கோலாலம்பூர்: கட்சி இரகசியங்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட உச்சமன்றக் குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பை விவேகமற்றது என்று அம்னோவின் முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.
சந்திப்பு இரகசியங்களை வெளிப்படுத்தியதாகக் கூறி சில உச்சமன்றக் குழு உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி அறிவித்தபோது பலர் அதிர்ச்சியடைந்ததாக அனுவார் கூறினார்.
“தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து தலைவர் என்னை நீக்கியதிலிருந்து நான் உச்சமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதால், யார் என்று என்னால் யூகிக்க முடியாது. விதிகளின்படி, ஒழுக்காற்று வழக்குகள், ஒழுங்கு வாரியத்தின் முன் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட செயல்முறை செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, உச்சமன்றக் குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவை அறிவிப்பது மிகவும் விவேகமற்றது மற்றும் பொருத்தமற்றது. இது கட்சியின் பெயரைக் கெடுக்கும், ” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் இன்று தெரிவித்தார்.
மார்ச் 17 அன்று, உச்சமன்றக் குழு கூட்டங்களின் இரகசியங்களை அடிக்கடி வெளிப்படுத்திய சூத்திரதாரிகள் எனக் கூறப்படும் இரண்டு அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.