Home நாடு இந்திய குத்தகையாளர்கள் வேண்டுகோளுக்கு ஹிண்ட்ராப் ஆதரவு!

இந்திய குத்தகையாளர்கள் வேண்டுகோளுக்கு ஹிண்ட்ராப் ஆதரவு!

702
0
SHARE
Ad

hindraf sambuகோலாலம்பூர், செப் 12 – கட்டுமான துறை போன்ற ஏனைய துறைகளில் மலேசிய இந்தியர்களுக்கு வழங்கப்படும் குத்தகைகளை அதிகரிக்க வேண்டும் என்று மலேசிய இந்திய குத்தகையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.சுகுமார் கூறிய கருத்துக்கு ஆதரவாக ஹிண்டராப் குரல் எழுப்பியுள்ளது.

இது குறித்து ஹிண்ட்ராப் இயக்கத்தின் துணைத்தலைவரான வி.சம்புலிங்கம் (படம்) விடுத்த பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:-

“துணை  குத்தகைகள்  மட்டுமல்லாமல்,பிரதான அரசு குத்தகைகளும் மலேசிய இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மலேசிய இந்திய குத்தகையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.சுகுமார் அவர்களின் கருத்தை ஹிண்ட்ராப் முழுமையாக ஆதரிக்கிறது.”

#TamilSchoolmychoice

“தற்சமயம் நாட்டில் இருபதாயிரம் இந்திய குத்தகையாளர்கள்  இருப்பதாகவும் அவர்களுக்கு வெறும் இரண்டிலிருந்து மூன்று விழுக்காடு அரசு குத்தகைகள் மட்டுமே வழங்கப்படுவதாகவும்  அவர் அறிவித்திருந்தார்.”

“துணை குத்தகைகளை மேற்கொள்ளும் இந்திய குத்தகையாளர்கள் பிரதான குத்தகையாளர்களிடமிருந்து கட்டணங்களை பெறுவதில் எப்போதுமே  சிரமங்களை எதிர்நோக்குவதால் பல்வேறு நிதி பிரச்சனைகளுக்கு அவர்கள் தள்ளபடுவது முற்றிலும் உண்மை”

“இந்நாட்டில் மலேசிய இந்தியர்களின் பொருளாதார உயர்வுகளுக்கு உகந்ததாக கருதப்படும் துறைகளில் கட்டுமான துறை உட்பட ஏனைய குத்தகை துறைகளும் மிகச் சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.”

“இதனை கருத்தில் கொண்டுதான் பாரிசான் கூட்டணியுடன் ஹிண்ட்ராப் செய்து கொண்ட ஐந்தாண்டு செயல் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் , தேசிய மற்றும் மாநில அளவில் அறிவிக்கப்படும்  அனைத்து வகை குத்தகைகளிலும் இந்தியர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கப் படவேண்டும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.”

“ஹிண்ட்ராப் – பாரிசான் ஒப்பந்தமானது அனைத்து மலேசிய இந்தியர்களும் பலனடைவதை உறுதி செய்யும் நோக்கில் இயற்றப்பட்டதாகும். எனவே இந்த ஒப்பந்தத்தை ஹிண்ட்ராப் ஒப்பந்தமாக கருதாமல் அனைத்து மலேசிய இந்தியர்களுக்கும்  நன்மை பயக்கும் செயல் வரைவாக அர்த்தப்படுத்திக் கொண்டு விரைவில் செயல் வடிவம் கொள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் அவர்கள் முனைப்பு  காட்டவேண்டும்.”

“தற்சமயம் நாட்டில் 20,000 இந்திய குத்தகையாளர்கள் தயார் நிலையில் இருப்பதாக சுகுமார் அறிவித்துள்ள  நிலையில் அவர்களை அரவணைத்து ,  நிதி மற்றும் ஏனைய தேவையான அனுகூலங்களை அவர்களுக்கு பிரத்யேகமாக அறிவித்து வெற்றிபெற செய்வதை பிரதமர் உறுதி படுத்த வேண்டும் என்றும் ஹிண்ட்ராப் கேட்டுக் கொள்கிறது.”

இவ்வாறு சம்புலிங்கம் தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.