வாஷிங்டன், செப். 12- கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளில் 19 அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் நான்கு பயணிகள் விமானங்களைக் கடத்தி அவற்றின் மூலம் அந்நாட்டின் நான்கு இடங்களில் தங்களின் தற்கொலைத் தாக்குதலை நடத்தினார்கள்.
வாஷிங்டன் நோக்கி செலுத்தப்பட்ட நான்காவது விமானம் பயணிகள் எதிர்ப்பினால் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஷன்க்ஸ்வில் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டிடங்களும் முற்றிலும் சேதமடைந்தன. இந்தத் தாக்குதல்களில் 19 தீவிரவாதிகளுடன் கிட்டத்தட்ட 3000 பொதுமக்களும் உயிரிழந்தனர்.
அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான விபத்தாக சித்தரிக்கப்பட்ட இந்த சம்பவத்தின் பனிரெண்டாவது ஆண்டு நினைவுதினம் அங்கு அனுசரிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அவரது மனைவி, துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் அமைதியாக நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்னர், ராணுவத் தலைமையகத்தில் நடந்த தாக்குதல் குறித்த தனது கருத்துகளை அதிபர் பகிர்ந்துகொண்டார்.
இரட்டைக் கோபுரங்களின் மீது முதல் விமானம் மோதிய 8.46 மணிக்கு மவுன அஞ்சலி தொடங்கியபோது, நியூயார்க் நகரத்தின் முன்னாள் மேயர் ருடால்ப் கியுலியானி கண்கலங்கினார்.