கோலாலம்பூர், செப் 13 – கடந்த 100 நாட்களாக காஜாங் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார் தனது சிறை அனுபவங்களை விவரித்து நீண்ட கடிதம் ஒன்றை பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ளார்.
அதில் சிறையில் நடக்கும் பல முறைகேடுகள் குறித்து விவரித்துள்ளார். ஆனால் அந்த அனுபவங்கள் தனிப்பட்ட முறையில் தனக்கு நேர்ந்ததா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
சிறையில் குண்டர்கள்
சிறையில் நடக்கும் குண்டர் கும்பலின் அட்டகாசங்களை சிறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று உதயகுமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“சிறை அதிகாரிகள் வெளியே சென்றுவிடுவதால், ஜுருலாதி (Jurulatih) என்ற அழைக்கப்படும் இந்த குண்டர்களின் அட்டூழியம் மேலோங்கிவிடுகிறது.”
“கைதிகளுக்கு அவர்களது அன்புக்குரியவர்கள் மாதம் ஒருமுறை வாங்கி வரும் பொருட்களை சிறை அதிகாரிகள் கண் முன்னரே அந்த குண்டர்கள் பறித்துக்கொள்கின்றனர்.”
“சிறையில் இந்த மலாய் குண்டர்கள் சிறிய விஷயங்களுக்கு கூட சத்தமாக கத்தி கூச்சல் போடுவது, மற்ற கைதிகளை வெயிலில் முட்டி போடவைப்பது போன்ற பல சித்திரவதைகளை செய்கின்றனர்”
“இதை கண்டுகொள்ளாமல் விட்ட சிறை அதிகாரிகளுக்கு சலுகையாக அவர்கள் இலவசமாக மசாஜ் செய்து விடுகின்றனர்.” என்று உதயகுமார் தனது கடிதத்தில் விவரித்துள்ளார்.
இழிவுபடுத்தும் செயல்கள்
“சிறைக் கைதிகள் ஆடைகள் களையப்பட்டு, அவர்கள் குனிந்து கால்களை விரிந்து நிற்க வேண்டும். அப்போது அவர்களின் ஆசனவாய் பகுதியில் போதைப் பொருட்கள் ஏதும் இருக்கிறதா என்று சிறை அதிகாரிகள் சோதனை இடுகிறார்கள். அதோடு பலமுறை அப்படியே உட்கார்ந்து எழுந்து, இரும வேண்டும் அப்படி செய்யும் போது போதைப் பொருள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் வெளியே வந்துவிடும் என்று அவ்வாறு செய்யச் சொல்கிறார்கள்.”
இதுமட்டுமல்ல சிறையில் கைதிகள் மரணமடைவதும் மிகுந்த அச்சத்தை எனக்கு ஏற்படுத்தியது.
“சிறையில் கைதி ஒருவர் மரணமடைந்ததை நான் கண்டேன். வயது முதிர்ந்த சீனர் ஒருவர் நினைவு தப்பிய நிலையில் கொண்டு வந்து கிடத்தப்பட்டார். அவரது வாயில் ஒரு சிறிய தாள் ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தது. அதில் அவரது பெயரும் அவரது எண்ணும் எழுதப்பட்டிருந்தது. அவரது நிலை குறித்து நான் சிறை அதிகாரிகளுக்கு வலியுறுத்திய பின்பு, 8 மணி நேரம் கழித்தே அவர் காஜாங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பின்பு அவர் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது.” என்று உதயகுமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நீரிழிவு நோய் உள்ளவரான 56 வயதான உதயகுமார், கடந்த இரண்டு மாதங்களாக முதுகுத் தண்டுவட தட்டு விலகல் (prolapsed disc) பிரச்சனையாலும் அவதிக்குள்ளாகி வந்தார். அதோடு சிறையில் குளியல் அறையில் வழுக்கி விழுந்து அவரது ஆட்காட்டி விரலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் உட்பட, மனிதாபிமானத்தோடு தன்னை சந்திக்க வரும் அனைவரையும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
“என்னை சந்திக்க முயற்சி செய்து வரும் லிம் குவான் எங் அவர்களை வரவேற்கிறேன். அதோடு சுஹாகாம், வழக்கறிஞர் மன்றம், பக்காத்தான் நாடாளுமன்ற மனித உரிமைக் குழு ஆகியோரையும் என்னை சந்திக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.