கோலாலம்பூர், செப் 20 – முதுமையின் காரணமாக அம்னோ செத்துக்கொண்டிருக்கிறது என்று முன்னாள் பிரதமர் மகாதீர் கூறிய கருத்தை அம்னோ கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமருமான நஜிப் துன் ரசாக் மறுத்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 79 இடங்களை தக்க வைத்த அம்னோ, நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலில் 88 இடங்களைப் பெற்றிருப்பதை நஜிப் சுட்டிக்காட்டினார்.
மேலும், தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்க அம்னோ தான் அதற்கு உறுதுணையாக இருந்தது என்றும், தேசிய முன்னணிக்கு அரணாக அம்னோ விளங்குவதாகவும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி மகாதீர் விடுத்த அறிக்கையில், எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் இளம் தலைவர்களைத் தேர்வு செய்தால் மட்டுமே, முதுமையால் இறப்பை நோக்கிப் போய் கொண்டிருக்கும் அம்னோவை காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.