திருவனந்தபுரம், செப். 23– கேரளாவைச் சேர்ந்தவர் பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயி.
இவரது ஆசிரமம் கொல்லத்தில் உள்ள அமிர்தபுரியில் உள்ளது.
மாதா அமிர்தானந்தமயிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
இவரது 60–வது பிறந்தநாள் விழா வருகிற 27–ந்தேதி வருகிறது.
இதையொட்டி மாதா அமிர்தானந்தமயின் பிறந்த நாள் விழா “அமிர்த வருஷம்–60” என்று கொண்டாடப்படுகிறது.
நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற 27–ந்தேதி வரை அமிர்தபுரியில் ஆசிரமத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது.
அமிர்தபுரி ஆசிரமத்தில் நேற்று காலை விசேஷ ஹோம பூஜை நடைபெற்றது.
இந்த பூஜையை மாதா அமிர்தானந்தமயி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த ஹோமத்திற்கு 72 சதுர அடியில் பெரிய ஓம குண்டம் அமைக்கப்பட்டிருந்தது.
72 பூசாரிகள் ராகவேந்திர பட்டர் தலைமையில் இந்த ஹோமத்தை நடத்தினர்.
மாதா அமிர்தானந்தமயி பிறந்தநாளையொட்டி ஆசிரமத்திற்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேலும் ஏழைகளுக்கு கல்வி உதவித்தொகை, புற்று நோயாளிகள், இருதய நோயாளிகளுக்கு மாதா அமிர்தானந்தமயி மருத்துவக் கல்லூரியில் இலவச சிகிச்சை பிரபல மருத்துவர்கள் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கியும் அமிர்தானந்தமயின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.