Home இந்தியா ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று அமெரிக்கா பயணம்

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று அமெரிக்கா பயணம்

402
0
SHARE
Ad

புதுடெல்லி, செப். 25-ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் இன்று (புதன்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஒபாமாவை நாளை மறுதினம் சந்திக்கிறார்.

Manmohan-Singh-Pardaphash-82750ஐக்கிய நாடுகள் சபையின் 68-வது பொதுச்சபை கூட்டம் நேற்று தொடங்கியுள்ளது.

அக்டோபர் 1-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இந்த கூட்டத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குதல், ஆயுதங்களை கைவிடல், ஐ.நா. சீர்திருத்தங்கள், மேம்பாடு ஆகியறை குறித்து முக்கியமாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதில் பிரதமர் மன்மோகன்சிங் 28-ந்தேதி கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அவர் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வறுமை ஒழிப்பு குறித்தும் அவர் தனது கருத்துக்களை தெரிவிக்க உள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் இடையே வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினா உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களையும் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசக்கூடும் என தெரிகிறது.

முன்னதாக நாளை மறுதினம் (27-ந் தேதி) வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசுகிறார்.

மதிய விருந்துடன்கூடிய இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2009-ம் ஆண்டுக்கு பின்னர் இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து, தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவது இது மூன்றாவது முறை.

இந்த சந்திப்பின்போது, இருதரப்பு வர்த்தக மேம்பாடு, ராணுவத்துறையில் ஒத்துழைப்பு, பொருளாதாரத்துறையில் ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, சர்வதேச விவகாரங்கள் பற்றி மன்மோகன்சிங்கும், ஒபாமாவும் விரிவாகப் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

விசா நடைமுறையில் அமெரிக்கா செய்ய உத்தேசித்துள்ள மாற்றங்கள், இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு தடைச்சுவராக அமையும் என்ற கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான இந்தியாவின் கவலையை ஒபாமாவிடம் மன்மோகன்சிங் தெரிவித்து, பரிகாரம் தேடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.