பாகிஸ்தான், செப் 25 – பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பலூசிஸ்தான் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் அம்மாகாணத்தின் குஜ்தார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நிலநடுக்கத்தின் காரணமாக அங்கு ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
இது குறித்து குஜ்தார் மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில்,“இங்கு ஏராளமான வீடுகளும், கடைகளும் இடிந்து விழுந்துள்ளன. இதனால் சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் ஆவாரன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.பாஸ்னி, விந்தார் ஆகிய ஊர்களிலும் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. ஆனால் சேதம் பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை” என்று தெரிவித்தார்.
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 200 பேர் அடங்கிய மீட்புப் படை, மருத்துவக் குழுவினர், ஒரு ஹெலிகாப்டர் ஆகியவற்றை பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், பாகிஸ்தானின் வானியல் ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.
நில நடுக்கத்தின் அதிர்வுகள் 5 முதல் 5.9 ரிக்டர் அலகுகள் வரை பதிவானதாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜ்தார் மாவட்டத்தின் ஆவாரன் ஊரிலிருந்து 69 கிலோ மீட்டர் தொலைவில், 23 கிலோ மீட்டர் ஆழத்தில், பாகிஸ்தான் நேரப்படி மாலை 4.29 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கராச்சி, ஹைதராபாத் (பாகிஸ்தான்), லர்கானா மற்றும் சிந்து மாகாணத்தின் பல ஊர்களில் உணரப்பட்டது.
பல நிமிடங்கள் நீடித்த இந்த நில அதிர்வுகளால் பீதியடைந்த மக்கள், வீடுகளையும், அலுவலகங்களையும் விட்டு அலறியடித்தபடி வெளியேறினர்.
பாகிஸ்தானின் தேசிய நில நடுக்கக் கண்காணிப்பு மையத் தலைவர் ஜாகித் ரஃபி கூறும்போது, பலூசிஸ்தானின் குவெட்டா மற்றும் பிற பகுதிகளில் மிகக் கடுமையான நில நடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டது.
இந்திய தலைநகர் டில்லியில் மாலை 5 மணிக்கு நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.