கோலாலம்பூர், செப் 27 – ஜசெக கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் மறுதேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஜசெக விடுத்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஏற்று இன்று அனுமதி வழங்கியுள்ளது.
நீதிபதி ரோசைனி சாயுப் இன்று வழங்கிய தீர்ப்பில், ஜசெக மறுதேர்தலை நடத்த அனுமதிப்பதாகத் தெரிவித்ததோடு, இவ்வழக்கு செலவிற்காக விண்ணப்பதாரருக்கு 5000 ரிங்கிட் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
நீதிமன்றம் முழுவதும் ஜசெக உறுப்பினர்களால் நிரம்பி வழிந்தது. அவர்களுடன் ஜசெக கட்சி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் லிம் குவான் எங்கும் இருந்தனர்.
கடந்த ஜூலை மாதம் ஜசெக கட்சியின் லாடாங் பாரோய் கிளை உதவித்தலைவர் டேவிட் தாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காரணத்தினால், அவர் ஜசெக மறுதேர்தலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார்.
அவரது வழக்கில், ஜசெக கட்சித் தேர்தல் குறித்து உறுப்பினர்களுக்கு 10 வாரங்களுக்கு முன்னதாக அறிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது வழக்கை எதிர்த்து, ஜசெக தலைவர் கர்பால் சிங், தாக்கல் செய்த வழக்கில் இன்று ஜசெக விற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.