ஷாங்காய், செப். 30 – சீனாவின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் ஷாங்காய் நகரில் நேற்று சீன அரசு சுதந்திர வர்த்தக மண்டலத்தைத் திறந்து வைத்துள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார மையமாக விளங்கும் சீனாவின் வர்த்தகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அவசியமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள இது ஒரு சோதனைத் திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று தொடங்கப்பட்ட இந்த மையம் 29 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு நடைபெறும் வர்த்தகத்தினால் ஏற்படும் மாற்றங்கள் நெருக்கமாகக் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்துவரும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கக் கூடிய உறுதியான கட்டமைப்பு மாற்றங்களை செய்ய முடியும் என்று சீனா நம்புகின்றது.
சீனாவின் மாநில அமைச்சரவையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, சோதனை அடிப்படையில் வர்த்தகத்துக்குரிய மூலதன கணக்குகளை சீனாவின் பணமதிப்பிற்கு இலவசமாக மாற்றக்கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி சந்தையின் வட்டி விகிதங்களும் சோதனை முயற்சியிலேயே நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
வர்த்தக மண்டலத்தின் உள்ளே வெளிநாட்டு முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.நிதி, கப்பல் வர்த்தகம் முதற்கொண்டு கலாச்சார சேவைகள் உட்பட 18 சேவைத் துறைகளில் இவர்களுக்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த புதிய சுதந்திர வர்த்தக மையம் குறித்த எதிர்பார்ப்பு அங்கு அமைந்துள்ள நிறுவனங்களின் பங்கு சந்தை மதிப்பை உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி அந்தப் பகுதியின் அருகிலுள்ள நில மதிப்புகளும், குடியிருப்புகளின் விற்பனை மதிப்புகளும் கடந்த சில வாரங்களில் உயர்ந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
புதிய மையத்தின் செயல்பாடுகள், சீன அரசாங்கம் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் முனைப்பாக இருப்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆயினும், எந்தவகையான கட்டுப்பாடுகளை அங்கு செயல்படுத்த முடியும் என்பது கவனிக்கப்பட வேண்டும் என்று சீனாவில் உள்ள ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தின் துணைத் தலைவரான ஸ்டீபன் சாக் தெரிவித்துள்ளார்.
ஷாங்காயின் வர்த்தக மண்டலம் மட்டுமே சீனாவின் வணிக செயல்பாடுகளை மாற்றமுடியாது என்றும் அவர் கூறினார்.