Home தொழில் நுட்பம் எச்.டி.சி 1 – திறன் பேசிகளுக்கான அண்ட்ரோய்ட் 4.3 மென்பொருளை புதுப்பித்து மேம்படுத்துவது அறிமுகம்!...

எச்.டி.சி 1 – திறன் பேசிகளுக்கான அண்ட்ரோய்ட் 4.3 மென்பொருளை புதுப்பித்து மேம்படுத்துவது அறிமுகம்! தமிழும் இடம் பெறுகின்றது!

726
0
SHARE
Ad

HTC-1-Featureசெப்டம்பர் 30 – தைவானிலிருந்து தயாரிக்கப்பட்டு உலக அளவில் தற்போது பிரபல்யமடைந்து வரும் எச்டிசி 1 (HTC One) திறன் பேசிகள் அண்ட்ரோய்ட் இயங்குதளத்தில் இயங்கி வருகின்றன. இந்த அண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் மென்பொருள் 4.3 தற்போது புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்த மென்பொருளின் மேம்படுத்துதலில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், தமிழ் மொழியும் மென்பொருளில் இணைக்கப்பட்டிருப்பதாகும்.

அண்மையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐஓஎஸ் 7 இயங்குதள மென்பொருளில் தமிழை உள்ளீடு செய்துள்ளதைத் தொடர்ந்து எச்டிசி 1 நிறுவனமும் தற்போது அண்ட்ரோய்ட் 4.3 இயங்குதளத்தில் தமிழை உள்ளீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எச்டிசி 1 தமிழ் உள்ளீட்டில், தமிழ் 99 மற்றும் அஞ்சல் என இரண்டு விதமான தமிழ் விசைகள், ஐஓஎஸ் 7 மென்பொருளைப் போன்றே இதிலும் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் உள்ளிட்ட மற்ற இந்திய மொழிகளும் அழகான எழுத்துருக்களுடன் உள்ளீடு செய்யப்பட்டிருக்கின்றன.

தைவானிலுள்ள பயனீட்டாளர்கள் தற்போது இந்த புதிய இயங்குதள மென்பொருளை பதிவிறக்கம் செய்யத் தொடங்கியுள்ளனர். 564 எம்.பி (564MB) கொள் அளவுடைய இந்த மென்பொருள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ளது.

இந்த மாற்றங்களில் குறிப்பிடத்தக்கவை, மின்கலம் எத்தனை சதவீதம் மின்னேற்றம் செய்துள்ளது என்பதைக் காட்டும் குறியீடு; திரைக்காட்சியை மேம்படுத்தியிருப்பது; குறைந்த வெளிச்சத்திலும் புகைப்படம் எடுக்கும் திறன்; கூடுதலான காணொளி (வீடியோ) தேர்வுகள்; இசை சேர்ப்புகள்  போன்றவையும் அடங்கும். மேலும் சில குறைபாடுகளைச் சரிசெய்யும் இயக்கங்களும் இந்த மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

விரைவில் இந்த மென்பொருள் உலக அளவில் பதிவிறக்கம் செய்யும் வாய்ப்புக்கள் ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.