அக்டோபர் 3 – விஜய் சேதுபதி படமா? பயப்படாமல் போய்ப் பார்க்கலாம், மனுஷன் தேர்ந்தெடுத்து நடிக்கின்றார் என்ற நல்ல பெயரை வாங்கி விட்ட விஜய் சேதுபதியின் புதிய படைப்பு “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?”.
தனது சினிமா அனுபவங்களை வைத்து பிரபல தமிழக எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய கட்டுரைத் தொடர்தான் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”. அந்த பிரபல்யத் தலைப்பை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கின்றார்கள்.
இந்தப் படத்திலும் விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை அவர் ஏமாற்றவில்லை. தனக்கு வழங்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தோடு அப்படியே ஒன்றித்து சிறந்த நடிப்பை வழங்கியிருக்கின்றார்.
ஆனால் இயக்குநர் கோகுல் கொஞ்சம் ஏமாற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நான்கைந்து வெவ்வேறு களங்களில் வேறு வேறு கதாபாத்திரங்களோடு தொடங்கும் படம் திசை தெரியாமல், இலக்கில்லாமல் பயணிப்பதுதான் படத்தின் பலவீனம். பல இடங்களில் தேவையில்லாமல் கதாபாத்திரங்கள் வளவளவென்று பேசிக் கொண்டே இருப்பது போரடிக்கின்றது.
முதல் பாதியில் காட்டப்படுகின்ற சம்பவங்களில் எவை முன்பு நடந்தவை (பிளாஷ் பேக்) எவை இப்பொழுது நடப்பவை என்ற குழப்பம் அதிகமாக ஏற்படுகின்றது. அதிலும் அவ்வப்போது,‘இப்பொழுது’ என்று திரையில் காட்டப்படும்போது, அப்படியானால் இதுவரை காட்டியது முன்பு நடந்த காட்சிகளா என நமக்கும் மண்டை காய்கின்றது.
இதுபோன்ற சில குழப்பங்களைத் தவிர்த்து, கதையின் வெவ்வேறு களங்களை ஒருங்கிணைப்பதில் இயக்குநர் மேலும் கவனம் செலுத்தியிருந்தால், ஒருமுகப்படுத்தியிருந்தால் படம் இன்னொரு ‘சூதுகவ்வும்’ படம் போன்று சிறப்பாக பரிணமித்திருக்கும்.
படம் முழுக்க நகைச்சுவைத் தோரணங்களை வாரி இறைத்திருக்கின்றார்கள். இருந்தாலும் நகைச்சுவையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்கள் சிரிப்பை வரவழைப்பதற்குப் பதிலாக வெறுப்பை வரவழைக்கின்றன.
வசனங்களை கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி எழுதியிருக்கின்றார். அநேகமாக இதுதான் அவர் வசனங்கள் எழுதும் முதல் படமாக இருக்கும். பல இடங்களில் புத்திசாலித்தனமான வசனங்கள் பளிச்சிடுகின்றன.
மாதிரிக்கு, இரண்டு எதிர்வீட்டு கணவன் மனைவிகள் சண்டை போட்டுக் கொள்ளும்போது, “உன் புருஷன் காட்டெருமை மாதிரி இருக்கான்” எனத் திட்ட, மனைவியோ “அதைப் பத்தி நானே கவலைப்படலை நீ ஏன் கவலைப்படறே” என பதிலளிக்கும்போது திரையரங்கமே அதிர்கின்றது. இதுபோன்று பல இடங்களில் மதன் கார்க்கியின் வசனங்கள் மின்னுகின்றன.
நூலிழை போன்ற கதையொன்றை வைத்துக் கொண்டு அதைச்சுற்றி சம்பவங்களைக் கோர்வையாகக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். ஆனால் இந்த இயக்குநரும் முக்கால் வாசிக் கதையை டாஸ்மாக் எனப்படும் தமிழக மதுபானக் கடைகளையே சுற்றி நடைபெறுமாறு வைத்திருக்கின்றார் என்பதுதான் கொடுமை. மதுபானக் கடைகளைத் தவிர்க்காமல் இந்தக் கால இயக்குநர்களுக்கு சிந்திக்கவே தெரியாதா எனக் கேட்கத் தோன்றுகின்றது.
ஆனால், அதற்கு பரிகாரமாக, படத்தின் இறுதிக் காட்சிகளில் குடித்து விட்டு நடந்து கொள்வதால் சில குடும்பங்களில் ஏற்படும் இழப்புகளையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் காட்டுகின்றார்கள். குடிக்காதீர்கள் என பிரச்சார பாணியில் திரையில் வாசகமும் போடுகின்றார்கள்.
சுமார் மூஞ்சி குமார் என்ற பெயரில் வழக்கம்போல் ஊர் சுற்றியாக வரும் விஜய் சேதுபதி, எதிர் வீட்டில் வசிக்கும் பட்டிமன்ற ராஜாவின் மகளான நந்திதாவை (அட்டகத்தி புகழ்) விரட்டி விரட்டிக் காதலிக்கின்றார். அந்தக் காதலை முறிப்பதற்கு வட்டார தாதா பசுபதியை வைத்து கட்டப் பஞ்சாயத்து வைக்கின்றார் அப்பா பட்டிமன்ற ராஜா.
அந்தக் கட்டப் பஞ்சாயத்தும் ஒரு மதுபானக் கடையில்தான் நடக்கின்றது. கட்டப் பஞ்சாயத்து முடிவில் விஜய் சேதுபதியை அடித்துத் துவைத்து வெளியே அனுப்புகின்றனர்.
இன்னொரு மதுபானக் கடையிலோ, இரண்டு பேர் ஒருவரை கொலை செய்துவிட்டுப் போகின்றார்கள். அந்தக் கொலையைப் பற்றி காவல் துறையினரும் துப்பு துலக்கத் தொடங்குகின்றனர்.
இதற்கிடையில் வங்கியில் வேலை செய்யும் பாலா என்ற கதாபாத்திரத்தில் வரும் அஸ்வின் அடிக்கடி குடித்துவிட்டு, தனது காதலி சுவாதியுடன் (கண்கள் இரண்டால் பாடலால் பிரபலமான சுப்ரமணியபுரம் படத்தின் கதாநாயகி) கருத்து வேறுபாடுகளில் சிக்குகின்றார்.
குடித்துவிட்டு அவர் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் மோதித் தள்ளிவிட, அபாய நிலையில் இருக்கும் அவருக்கு செலுத்துவதற்கு அபூர்வ ரக ரத்தம் தேவைப்பட, அந்த ரத்தத்துக்குரியவர் விஜய் சேதுபதிதான் எனக் கண்டுபிடித்து எல்லாரும் அவரைத் தேட, அவரோ அவருடைய செல்பேசியை, மதுமானக் கடையில் கொலை செய்தவர்களிடத்தில் தொலைத்துவிட…..இப்படியாக பல்வேறு திசைகளில் பயணிக்கும் கதை இறுதியாக மருத்துவமனையில் வந்து சுபமாக முடிகின்றது.
படத்தின் சுவாரசியமான கிளைக் கதை
இந்தப் படத்தில் கிளைக் கதையொன்றில், பெரிய பூவை சூடிக் கொண்டு வரும் நடிகை (தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பவராம்) காதல் மயக்க மொழிகளை உதிர்த்து தன்னைச் சுற்றி இருப்பவர்களை தொலைபேசியிலும், நேரடியாகவும் வளைப்பதும், அவர் வலையில் நகைச்சுவை நடிகர் சூரி வீழ்வதும்தான் சுவாரசியமான பாகம்.
ஒவ்வொருவரிடமும் காதல் ஒழுக அந்த பெண்மணி புதிய பறவை சரோஜாதேவி பாணியில் தொலைபேசியில் பேசுவதும் அதைக் கேட்பவர்கள் உருகி வழிவதும் திரையரங்கமே சிரிப்பலைகளால் நிறைந்து வழிகின்றது.
நடிகர் – நடிகையர்
வழக்கம்போல் இதிலும் விஜய் சேதுபதி பாராட்டும்படியான நடிப்பை உணர்ந்து வழங்கியிருக்கின்றார்.
ஆனால், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி அதே தாடி முடியோடு விஜய்? சீக்கிரம் முடிவு செய்து வித்தியாசங்களைத் தோற்றத்திலும் நடிப்பிலும் கொண்டு வாருங்கள் இல்லாவிட்டால் போரடித்துவிடும்.
ஒரே இடத்தில் உட்கார்ந்து பலவிதமான பாவங்களைக் காட்டி திரையரங்கையே கலகலக்க வைக்கும் பாணி, பிரகாஷ் ராஜூவிற்குப் பிறகு பசுபதிக்கு கைவந்த கலை. இதிலும் அதில் பசுபதி வெற்றி பெறுகின்றார்.
மற்ற நடிகர்களும் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கின்றார்கள். எப்போதும் குறை கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் சுவாதி நவீன உடைகளில் வந்து கவர்கின்றார்.
நந்திதாவும் தனது காதலைக் காட்டாமல் சிடுசிடுவென விஜய் சேதுபதியின் மீது எரிந்து விழுந்து நல்ல நடிப்பை வழங்கியிருக்கின்றார்.
படத்தின் பின்பாதியில் வரும் சூரியும் அலம்பலும் புலம்பலுமாக சிரிப்பை வரவழைக்கின்றார்.
பல காட்சிகள் கதைக்குத் தேவையில்லாமல் பின்னப்பட்டிருக்கின்றன. கதாபாத்திரங்களும் போரடிக்கும் விதமாக வளவளவென்று பேசிக் கொண்டிருப்பது படத்தின் முக்கியமான பலவீனங்களுள் ஒன்று.
இந்த அளவுக்கு மதுபானக் கடைகளும் காட்சிகளும் காட்டப்பட வேண்டுமா? அவை இல்லாமல் கதையை இன்னும் சிறப்பாக அமைத்திருக்க முடியாதா என இயக்குநரைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகின்றது.
பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம்தான். மதுபானக் கடையில் வழக்கம்போலப் பாடப்படும் பாடலைத் தவிர்த்திருக்கலாம். இருப்பினும் வழக்கமான காதல் பாடல்களைச் சேர்க்காதது நல்ல முயற்சி.
மொத்தத்தில்,
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ – பாதி ஜாலி; மீதி பொறுமையை சோதிக்கும் போரடிப்பு!
-இரா.முத்தரசன்