அக்டோபர் 20 – மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற அம்னோவின் கட்சித் தேர்தலில் மூன்று உதவித் தலைவர்களாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி (166 வாக்குகள்), டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டால் (152 வாக்குகள்) மற்றும் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹூசேன் (100 வாக்குகள்) ஆகிய மூவரும் தேசிய உதவித் தலைவர்களாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள்தான் தற்போது நடப்பு உதவித் தலைவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற உதவித் தலைவர்கள் வேட்பாளர்களான முன்னாள் மலாக்கா முதலமைச்சர் அலி ருஸ்தாம், முன்னாள் அமைச்சரும் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாருமான இசா சாமாட் ஆகிய இருவரும் படு மோசமாக தோல்வியுற்றனர்.
ஆனாலும், முன்னாள் பிரதமர் மகாதீரின் மகனான டத்தோ முக்ரிஸ் மகாதீர், 91 வாக்குகள் பெற்று நான்காவது நிலையில் வந்து ஹிஷாமுடினுக்கு கடுமையான போட்டியை வழங்கியிருந்தார்.
இறுதி நிலவரப்படி ஹிஷாமுடின் 100 வாக்குகள் பெற்று, முக்ரிஸ் மகாதீரை விட 9 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தார். பல தொகுதிகளில் அவர்கள் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்திலேயே இருவரும் வாக்குளைப் பெற்றனர்.
சில புகார்கள் எழுந்தாலும், மூன்றாவது உதவித் தலைவர் யார் என்பதில் மறு தேர்தல் கிடையாது என்றும் அம்னோ தேர்தல் குழு அறிவித்துள்ளது.
அம்னோவில் பிரதமர் நஜிப் தலைவராகவும், துணைப் பிரதமர் மொய்தீன் யாசின் துணைத் தலைவராகவும் ஏற்கனவே ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.