அக்டோபர் 20 – ம.சீ.ச.வின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய்க்கு (படம்) எதிராக அவரைக் கண்டிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீர்மானத்திற்கு எதிராக பெரும்பான்மையான பேராளர்கள் வாக்களித்துள்ளனர்.
இதன் வழி அந்த தீர்மானத்தில் வெற்றி பெற்ற லியோவ் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமைத்துவ மாற்றத்திற்கு பாடுபடப் போவதாக சூளுரைத்துள்ளார்.
தீர்மானத்திற்கு ஆதரவாக 965 வாக்குகள் கிடைத்த வேளையில் எதிராக 1,190 வாக்குகள் பதிவாயின. மொத்தம் 2,189 பேராளர்கள் வாக்களித்தனர். 34 பேரின் வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.
இதன்வழி துணைத் தலைவராக இருக்கும் லியோவ்வின் ஆதிக்கம் தொடர்ந்து கட்சியில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் மத்திய அரசாங்கத்தில் எந்தவித பதவியையும் ஏற்பதில்லை என 2011, 2012 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மற்றொரு தீர்மானத்தை பேராளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த தீர்மானத்தை ஆதரித்து 1,080 வாக்குகள் பதிவாக எதிராக 1,090 வாக்குகள் பதிவாயின.
இருப்பினும், செனட்டர் பதவிகளையும், மற்ற அரசாங்கப் பதவிகளையும் மாநில ரீதியான பதவிகளையும் ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தை பேராளர்கள் ஆதரித்துள்ளனர்.
இதனால், இனி ம.சீ.சவிலிருந்து செனட்டர்களும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களும் பதவிகளை ஏற்றுக் கொள்ளத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தீர்மானத்தை தங்களின் வெற்றியாக லியோவ்வின் ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்த வேளையில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் ம.சீ.ச. தலைவர் சுவா சொய் லெக் மாநாட்டு மண்டபத்தில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.