கேமரன் மலை, அக் 23 – கேமரன் மலைக்கு அருகே உள்ள பெர்த்தாம் ஆற்றின் கரையோரங்களில் இருந்த 80 வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இன்று அதிகாலை சுல்தான் அபு பக்கார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட பொழுது கரைபுறண்டோடிய அதிகப்படியான நீரில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பேரில் மாண்டனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
காணமல் போன மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கேமரன் மலை காவல்துறைத் தலைவர் முகமட் ஸஹாரி கூறுகையில், “இறந்தவர்களில் ஒருவர் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஜஹாங்கிர்(வயது 30) மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த கெசாமட் (வயது 46) மற்றும் டான் டக் சோய் (வயது 51) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “காணாமல் போன 17 வயது இந்தோனேசிய சிறுமி ஒருவரைத் தேடிவருகின்றோம்” என்றும் ஸஹாரி குறிப்பிட்டார்.
அதிக மழையின் காரணமாக அணை உடைவதைத் தடுப்பதற்கு நேற்று இரவு 7 மணியளவில் நீர் வெளியேற்றப்பட்டது என்றும், இந்த சம்பவத்தில் 100 வாகனங்களுக்கும் மேல் சேதமடைந்ததாகவும் சஹாரி தெரிவித்தார்.
அணை திறந்துவிடப்படுவதற்கு முன் 20 குடும்பத்தினர் அந்தப் பகுதியில் இருந்து வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர் என்றும் சஹாரி தெரிவித்தார்.
இறந்த மூவரின் சடலங்களும் தானா ரத்தாவிலுள்ள சுல்தானா கல்சோம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.