பெங்களூர், அக் 23–கைப்பேசி பிரபலமானது போல் இப்போது இணைய தளத்தில் பேஸ் புக்கும் வேகமாக பிரபலமடைந்து உள்ளது. குறிப்பாக மாணவ–மாணவிகள், இளைஞர்களும், இளம் பெண்கள் ஏராளமானோர் பேஸ் புக்கில் கணக்கு தொடங்கி ஒருவருக்கொருவர் நட்பு ஏற்படுத்தி பேசி வருகிறார்கள்.
ஆனால் சமீபகாலமாக சிலர் போலி பெயர்களில் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியும், வேறொருவர் படங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் செயல் அதிகரித்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க மாணவர்களின் கல்வியையும் பாதிக்கிறது. பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவர்கள் முன்பெல்லாம் விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள். பின்னர் வீட்டுப்பாடம் படிப்பார்கள்.
ஆனால் இப்போது வீடு திரும்பும் மாணவர்கள் பேஸ் புக்கில் மூழ்கி விடுகிறார்கள். இதனால் சோர்வு ஏற்பட்டு வீட்டு பாடத்தை செய்ய மறக்கின்றனர். மறுநாள் பள்ளி செல்லும் போது ஆசிரியர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள்.
இதையடுத்து பெங்களூரில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்கள் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க தடை விதித்துள்ளது. பெரிய தனியார் பள்ளிகளான டெல்லி அரசு பள்ளி, செயிண்ட் ஜான்ஸ் உயர் நிலைப் பள்ளி, வித்யா நிகேதன் அரசு பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பேஸ் புக்கில் தொடங்க தடை விதித்துள்ளது.
உடனடியாக மாணவர்கள் அனைவரும் தங்களது பேஸ்புக் கணக்குகளை அழித்து விடுமாறு உத்தர விடப்பட்டுள்ளது.
இதுபற்றி செயிண்ட் ஜான்ஸ் பள்ளி முதல்வர் பிராங்கிளின் கூறுகையில், ‘‘வீடு செல்லும் மாணவர்கள் பேஸ் புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் களைப்பு அடைந்து வருகிறார்கள். பெற்றோர்களும் அவர்களை கண்டுகொள்வதில்லை. நீண்ட நேரம் பேஸ்புக்கில் இருப்பதால் மறுநாள் பள்ளிக்கு வரும் போது சோர்வுடன் காணப்படுகிறார்கள். எனவே தான் நாங்கள் இவ்வாறு தடை விதித்து இருக்கிறோம்’’ என்றார்.
இது மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நாங்கள் பேஸ் புக்கில் கவனம் செலுத்துவது இல்லை. இப்போது தடை விதித்து இருப்பதால் எங்களுக்கு பேஸ் புக் மீது ஆர்வத்தை தூண்டச் செய்கிறது என்று மாணவரான ஜோசப் கூறினார்.
பெயர் வெளியிட விரும்பாத மாணவர் கூறும் போது, நான் போலி பெயரில் கணக்கு தொடங்கினால் அதை யாரால் தடுக்க முடியும் என்றார்.
இதற்கிடையே பேஸ்புக்கில் மாணவர்கள் கணக்கு வைத்திருப்பதை தடுக்க மற்ற தனியார் பள்ளிகளும் பரிசீலித்து வருகின்றன.