Home இந்தியா சீனா, இந்தியா உடன்பாடு: எல்லையில் மோதல் வேண்டாம்! படைகளை குவிக்க கூடாது!

சீனா, இந்தியா உடன்பாடு: எல்லையில் மோதல் வேண்டாம்! படைகளை குவிக்க கூடாது!

679
0
SHARE
Ad

india-china_300x350_102213104826

பீஜிங், அக் 24- இந்தியா , சீனா இடையே விரிவான எல்லைப்பேச்சு நடந்துள்ளது. எல்லையில் பல பிரச்னைகளை சீனா ஏற்படுத்தி வரும் நிலையில், எல்லையில் எந்த தாக்குதலும் நடத்தக்கூடாது, படைகளை குவிக்க கூடாது என்று பரஸ்பரம் ஒப்புக்கொண்டு உடன்பாடு காணப்பட்டது.   சீனா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், சீன பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து பேசியதை அடுத்து, இந்த உடன்பாடு ஏற்பட்டது. மொத்தம் 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டாலும், அருணாச்சல், காஷ்மீர் மக்களுக்கு தன்னிச்சையாக சீனா ‘ஸ்டேபிள்டு’ விசா தரும் விவகாரம் பற்றி இந்தியா பேசவே இல்லை.

இந்தியா , சீனா இடையே எல்லை பிரச்னை தீராத ஒன்றாக உள்ளது. முதன் முதலில் 1954ல் பிரதமர் நேரு , சீன பிரதமர் சூயென்லாய் இடையே பேச்சு நடந்தது.

#TamilSchoolmychoice

இரு நாட்டு ஒற்றுமை, அமைதி தொடர்பாக பல முறை அடுத்தடுத்து வந்த பிரதமர்கள் பேசிவந்தாலும், நேரடி போர் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு வருகிறதே தவிர, எல்லையில் இந்தியாவுக்கு தொடர்ந்து சீனா தலைவலியை தந்து வருகிறது.

காஷ்மீர், அருணாச்சல் பிரதேசத்தில் எல்லையோர பகுதிகளை ஆக்ரமித்து, அவ்வப்போது அதன் விமானப்படை ஹெலிகாப்டர் ஊடுருவி வருவதும், முகாமிட்டு பிரச்னை செய்வதுமாக தான் இருந்து வருகிறது. அவ்வப்போது இந்தியா எதிர்ப்பு காட்டினாலும், ஒரு கட்டத்துக்கு மேல் பேச முடியாமல் தான் நிலைமை நீடிக்கிறது.  கடந்த மூன்றாண்டுக்கு முன், அருணாச்சல், காஷ்மீரில் உள்ள சிலர் சீனா வந்து போக, பாஸ்போர்ட்டில் ‘பின்னடித்து’  விசாவை தந்தது சீன தூதரகம். அதாவது, இந்த இரு மாநிலங்களிலும் உள்ள சில பகுதிகள் எங்களுக்கு சொந்தமானது; அங்குள்ளவர்கள் சீனா வந்து செல்ல நாங்கள் விசா தருகிறோம் என்று சீனா கூறியது. இதை இந்தியா நிராகரித்து விட்டது.

வழக்கமாக ஒரு நாட்டுக்கு சென்று வர விசா தரும் போது, பாஸ்போர்ட்டில் ஒட்டி, இமிகிரேஷன் முத்திரையிட்டு தரப்படும். ஆனால், சீனா தரும் இது போன்ற விசா, முத்திரையிடப்படாது; பாஸ்போர்ட்டில் ‘பின்’னடித்து தரப்படும். இதற்கு ‘ஸ்டேபிள்டு’ விசா என்று பெயர். பல்வேறு துறைகளில் 8 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டாலும், இந்த வில்லங்க விசா பற்றி மட்டும் பேசவே இல்லை.

பிரம்மபுத்ரா நதியில் அணை கட்ட சீனா முயற்சிப்பதாக வந்த தகவலை அடுத்து, இரு நாட்டு நதி நீர் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில்,’ சீனா , இந்தியா இடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு, சமாதானம் பற்றி பேசினோம். இரு நாட்டுக்கும் நலன் பயக்க கூடிய, கவலை தராத விஷயங்கள் குறித்து விரிவாக பேசினோம். நட்புறவை வளர்த்து கொள்ள , பரஸ்பரம் நம்பிக்கையை திடப்படுத்த வேண்டிய வழிவகைகள் பற்றி பேசினோம்’ என்றார்.

4000 கிமீ எல்லை அமைதிக்கு 10 அம்ச ‘சூடான’  உடன்பாடு

* இரு நாட்டு ‘உண்மையான’ எல்லைக்கோட்டை மதிப்போம். அதன் விதிகளை மீறமாட்டோம்.

* எல்லையில் தாக்குதல் நடத்தமாட்டோம். சச்சரவுகளுக்கு இடம் தர மாட்டோம்.

* எல்லைக் கோடு விதிகள் அமலாகாத பகுதிகளில் உள்ள எல்லை பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

* தெளிவான விதிகள் இல்லாத நிலையில், எல்லை சச்சரவு குறித்து உயர்மட்ட அளவில் பேச வேண்டும்.

* எல்லைக்கோடு தொடர்பாக இரு நாடும் பரஸ்பரம் பாகுபாடில்லாமல் விதிகளை மதிக்க வேண்டும்.

* 1993, 2012 ல் எல்லை உடன்பாடுகளையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

* எல்லையில் நேருக்கு நேர் மோதலை தவிர்க்க வேண்டும்.

* ரோந்து படைகளை குவிக்கவோ, வேவு பார்ப்பதோ கூடாது.

* விதிமீறி தாக்குவதோ, டென்ஷன் ஏற்படுத்தவோ கூடாது.

* கண்டிப்பாக துப்பாக்கி சூடு நடத்தி பதற்றம் ஏற்படுத்த கூடாது.