கோலாலம்பூர், அக் 28 – கத்தோலிக்க வார இதழான ‘தி ஹெரால்ட்’ பத்திரிக்கையின் பிரதிகள் கடந்த வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப்பட்டதற்குக் காரணம் அதில் ‘அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்ற சோதனைக்காகத் தான் என்று உள்துறை அமைச்சு இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி ‘தி ஹெரால்ட்’ வார இதழ், ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்பதை சுட்டிக்காட்டிய உள்துறை அமைச்சு, அந்த வார இதழில் ‘அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவே அவ்வாறு தடுத்து வைத்ததாக விளக்கமளித்துள்ளது.
எனினும், சோதனை செய்ததில் ‘அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதியானதால், முடக்கி வைத்திருந்த 53 பிரதிகள் மீண்டும் வெளியிட அனுமதி வழங்கியதாகவும் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆனால், முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று, ‘தி ஹெரால்ட்’ பத்திரிக்கையின் சுமார் 2000 பிரதிகள், சபா மாநிலம் கோத்தா கினபாலு விமானநிலைய உள்துறை அமைச்சு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.
இது குறித்து கருத்துரைத்திருந்த சரவாக் மாநில பிகேஆர் தலைவர் பாரு பியன், அல்லாஹ் என்ற சொல்லை சபா, சரவாக் மாநிலங்களில் பயன்படுத்தலாம் என்ற பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வாக்குறுதி மீறப்பட்டுள்ளது என்பது இந்த தடுப்பு நடவடிக்கை காட்டுகிறது என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.