புத்ரா ஜெயா, அக் 30 – தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்குமாறு ம.இ.கா தேசியத் தலைவரும் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கவுள்ளார்.
தற்போது மலேசியாவில் பெரும்பான்மையான இந்திய சமூகத்தினர் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே பொது விடுமுறை வழங்கப்படுகிறது.
இது குறித்து பழனிவேல் கூறுகையில், “இந்தியர்களைப் பொறுத்தவரையில், குறிப்பாக இந்து சமூகத்தினருக்கு தீபாவளிப் பண்டிகை மிக முக்கியமான ஒன்று. உலகம் முழுவதும் இந்தியர்கள் பரவிக் கிடக்கிறார்கள். அன்றைய காலங்களில் ஒரு நாள் பண்டிகையாக இருந்தது, ஆனால் தற்போது 30 நாள் பண்டிகையாகிவிட்டது” என்று பழனிவேல் கூறினார்.
மேலும், தீபாவளிக்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறை வழங்குவது குறித்து, தான் பிரதமரிடம் இன்னும் சில தினங்களில் கோரிக்கை விடுக்கவிருப்பதாகவும், சீனர்களுக்கு சீனப் புத்தாண்டிற்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதையும் பழனிவேல் சுட்டிக்காட்டினார்.