கோலாலம்பூர், அக் 30 – பக்காத்தான் தனது 2008 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வாக்குறுதிகளில், 2013 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்பு வரை, வெறும் 15 சதவிகதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளது என்று உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி இன்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று தேசிய முன்னணியின் மெர்ஸிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லத்தீப் அஹமட் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சாஹிட், “நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் படி, பக்காத்தானின் 85 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என்று கூறினார்.
பக்காத்தான் தனது 2013 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், 1 மில்லியன் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது பற்றி கருத்து கூறிய சாஹிட், “பக்காத்தானின் தேர்தல் அறிக்கை வெறும் ‘குப்பை’ தான். எதிர்கட்சிகள் அடிமட்டத்தில் தான் இருக்க வேண்டும் அதை விடுத்து வாக்குறுதிகள் மூலம் வானத்தை எட்டி விட நினைக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.