Home கருத்தாய்வு மகாதீர் கருத்துக்களால் தே.மு.வாக்குகளை இழக்கும்.

மகாதீர் கருத்துக்களால் தே.மு.வாக்குகளை இழக்கும்.

717
0
SHARE
Ad

Mahathir-Slider

கோலாலம்பூர்,பிப்.10- தேசிய முன்னணிக்காக பிரச்சாரம் செய்வதாக கூறிக் கொண்டு மகாதீர் விடுக்கும் அறிக்கைகள்  மாறாக மக்கள் கூட்டணிக்கு நன்மையையே கொண்டு வந்து சேர்ப்பதாகவும், அவர் வாயைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் தேசிய முன்னணி வாக்குகளை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்குகின்றது என்றும் அரசியல் கண்காணிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, சபா மாநிலத்தில் மகாதீரின் தலைமைத்துவத்தின் கீழ் கள்ளக் குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கிய விவகாரத்தால், தேசிய முன்னணி மீதும், மகாதீர் மீதும் நடுநிலையான மலேசியர்களுக்கு வெறுப்புணர்வே மேலோங்கி வருகிறது.

#TamilSchoolmychoice

ஆனால் இந்த விவகாரத்தை மூடி மறைப்பதற்காகவும்,  திசை திருப்புவதற்காகவும் மகாதீர் தொடர்ந்து கூறி வரும் கருத்துக்களால், தேசிய முன்னணியின் வாக்கு வங்கி ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றது.

இன்னொரு புறத்தில் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தனது பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கும் தேசிய முன்னணிக்கு மகாதீரின் கருத்துக்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன.

மகாதீரின் மகளும் பெர்சே ஆதரவாளர்தான்….

ஒருவருடைய பிறப்புரிமையான குடியுரிமையை உலகில் எந்த நாடாவது பறித்தது உண்டா ? ஒரு குடியேற்றக்காரருக்கு பிரஜாவுரிமை கொடுக்கப்பட்டிருந்தால் அதனை வேண்டுமானால் பறிக்கலாம். ஆனால் பிறப்பால் குடியுரிமை பெற்றவருடைய குடியுரிமையை நிச்சயம் எந்த சட்டத்தாலும் பறிக்க முடியாது.

அத்தகைய நடவடிக்கையை எடுக்குமாறு சொல்வதிலிருந்து  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின்  தீய எண்ணமும், அவரது கடந்த கால அரசியல் பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டும் பழி வாங்கும் குணமும் வெளிப்பட்டுள்ளது.

அம்பிகா குறித்தும் வழக்கறிஞர் மன்றம் குறித்தும் அவர் விடுத்துள்ள கருத்துக்கள் அவரின் இனவாத அரசியலை மக்களுக்கு எடுத்துக்காட்டும் உச்சகட்ட உதாரணமாகும்.

எத்தனையோ மலாய்க்காரர்கள் அரசாங்கத்திற்கும் அம்னோவிற்கும் தேசிய முன்னணிக்கும் எதிராக, அம்பிகா மற்றும் வழக்கறிஞர் மன்ற பொறுப்பாளர்களை விட தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அந்த மலாய்க்காரர்களின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்று சொல்வதற்கு மகாதீருக்கு தைரியம் உண்டா?

மகாதீரின் புதல்வி மரினா மகாதீர் கூட பெர்சே ஆதரவாளர்தான். அவர் பெர்சே எதிர்ப்புப் பேரணியிலும் பங்கெடுத்துள்ளார். மரினா மகாதீரின் புதல்வி கூட அதாவது மகாதீரின் பேத்தி கூட பெர்சே ஆதரவாளர்தான்!

அதனால், அவர்களின் குடியுரிமையையும் பறிக்க வேண்டும் என்று மகாதீர் துணிந்து சொல்வாரா?

கள்ளக் குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கியவர்கள்தான் தேசத் துரோகிகள்!

இன்னொரு கோணத்தில் பார்த்தால், சபா கள்ளக் குடியேறிகளுக்கு திட்டமிட்டு, ரகசியமாக, சட்டவிரோதமாக குடியுரிமை வழங்கியவர்கள், அதனைச் செயல்படுத்தியவர்கள்தான் உண்மையான தேசத் துரோகிகள்!

அவர்களையெல்லாம் சட்டத்தின் முன் நிறுத்துவதோடு, அவர்களின் குடியுரிமையைப் பறித்தால் அதுதான் நியாயமானதொரு தீர்ப்பாக இருக்கும்.

இதற்கு மகாதீர் ஒப்புக் கொள்வாரா?

ஒப்புக்  கொள்ளமாட்டார். காரணம், அப்படி அவர் ஒப்புக் கொண்டால், சபா கள்ளக் குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கிய திட்டத்தின் முன்னோடியான மகாதீர்தான் முதல் குற்றவாளியாக கருதப்படுவார். தேசத் துரோகியாக அடையாளம் காணப்படுவார்.

அம்பிகாவுக்கு எதிரான கருத்தால் இந்தியர் வாக்குகளை தேசிய முன்னணி இழக்கும்

மேலும், அம்பிகாவைக் குறிவைத்து மகாதீர் தொடர்ந்து கூறிவரும் கருத்துக்களால் இந்தியர்களின் வாக்குகளை பெருமளவில் இழக்கும் அபாயத்தையும் தேசிய முன்னணி எதிர்நோக்கியுள்ளது.

ஐந்து மில்லியன் ரிங்கிட் செலவழித்து, ஒற்றுமைப் பொங்கல் என்ற பெயரால், குருவி சேர்ப்பது போல் இந்தியர் கூட்டத்தை பேருந்துகளிலும், கலைநிகழ்ச்சி என்ற பெயரிலும் கொண்டு வந்து சேர்த்து – அதன்மூலம் ஒரு லட்சம் பேர் திரண்டனர் என்றும் இந்தியர்களின் ஆதரவு தேசிய முன்னணி பக்கம் திரும்பி விட்டது என்றும் பெருமை பேசிக் கொண்டிருக்கும் ம.இ.காவினரின் அனைத்து முயற்சிகளையும், அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்ற ஒரே அறிக்கையால் தரைமட்டமாக்கி விட்டார் மகாதீர்!

எனவே, ஒவ்வொரு முறையும் தனது திருவாய் மொழியால், மக்கள் கூட்டணியினரின் ஆதரவு பெருகுவதற்கும், அவர்களின் வாக்கு வங்கி, குறிப்பாக இந்தியர் வாக்கு வங்கி, உயர்வதற்கும் உதவி வரும் மகாதீருக்கு மக்கள் கூட்டணியினர் உண்மையிலேயே நன்றி கூறத்தான் வேண்டும்.