Home அரசியல் “சூழ்ச்சியில் சிக்க வேண்டாம்” – பாஸ் கட்சிக்கு லிம் கிட் சியாங் அறிவுரை

“சூழ்ச்சியில் சிக்க வேண்டாம்” – பாஸ் கட்சிக்கு லிம் கிட் சியாங் அறிவுரை

558
0
SHARE
Ad

Lim-Kit-Siang1கோலாலம்பூர், நவ 7 – பாஸ் கட்சியின் பதிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று கர்பால் சிங் ஒருபோதும் கூறவில்லை என்றும், இது போன்ற சூழ்ச்சி வலைகளில் பாஸ் கட்சி சிக்கி விட வேண்டாம் என்றும் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து லிம் கிட் சியாங் ஹராகா டெய்லி நாளிதழுக்கு விடுத்த அறிக்கையில், “பக்காத்தானின் ஒற்றுமையை சீர்குலைக்க மற்ற கட்சிகள் முயன்றுவருகின்றன. நான் கர்பாலிடம் பேசினேன். பாஸ் கட்சியின் பதிவு ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர் கருத்து கூறவில்லை என்று தெரிவித்தார்.” என்று லிம் குறிப்பிட்டுள்ளார்.

‘தி ஹெரால்ட்’ கத்தோலிக்க வார இதழில் அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற தீர்ப்புக்கு ஆதரவாக இருக்குமாறு வழக்கறிஞர் மன்றத்தை, இஸ்லாம் வழக்கறிஞர் மன்றம் அச்சுறுத்தியதைத் தான் கர்பால் விமர்சனம் செய்தார் என்றும் லிம் கிட் சியான் விளக்கமளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“பெருகி வரும் இது போன்ற இன விவகாரங்களையும், மதம் சம்பந்தப்பட்ட சகிப்புத்தன்மையின்மையையும் கண்டு பகுத்தறிவும், நாட்டுப்பற்றும் நிறைந்த மலேசியர்கள் கவலையடைந்துள்ளனர். அது போன்ற இனவாதத்தை ஏற்படுத்தும் ஒரு அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு தான் கர்பால் சிங் பாஸ் கட்சியின் பதிவை ரத்து செய்யச் சொன்னார் என்பது” என்று லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை பினாங்கில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில், எல்லா இனம் சார்ந்த கட்சிகளின் பதிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கர்பால் சிங் தெரிவித்ததாக அரசாங்க செய்தி நிறுவனமான பெர்னாமா செய்தி வெளியிட்டது.

இதனால் கர்பால் சிங் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜசெக விற்கு எதிராக பாஸ் தலைவர்கள் குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.