Home அரசியல் கர்பால் சிங்கின் நோக்கத்தை பாஸ் புரிந்துகொள்ளுமா?

கர்பால் சிங்கின் நோக்கத்தை பாஸ் புரிந்துகொள்ளுமா?

629
0
SHARE
Ad

Karpal Singhகோலாலம்பூர், நவ 8 – தங்களது கூட்டணிக்கட்சியான பாஸ் கட்சியின் பதிவை இரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் கருத்து எதுவும் கூறவில்லை என்றும், அதற்காக அக்கட்சியிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்றும் ஜசெக தலைவர் கர்பால் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து கர்பால் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன அடிப்படையிலான அரசியல் கட்சிகள் மற்ற இனத்தவர்களையும் தங்களுடன் இணைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியது உண்மை தான். அதில் எதிர்பாராதவிதமாக பாஸ் கட்சியும் அடங்கியுள்ளது. ஆனால் கட்சியில் இஸ்லாம் அல்லாதவர்களுக்கும் இடம் கொடுத்து மத சார்பற்ற கட்சியென நிரூபிக்க வேண்டும் என்பதை பாஸ் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது என்பதையும் நான் இங்கு குறிப்பிடவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் பாஸ் கட்சியின் பதிவை இரத்து செய்ய வேண்டும் என்று கூறவில்லை. நான் இவ்விவகாரத்தில் பாஸ் கட்சியை இழுக்கவேயில்லை. நான் இன அடிப்படையிலான கட்சிகளைத் தான் சாடினேன். உண்மையைக் கூறினேன்” என்றும் கர்பால் சிங் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இஸ்லாம் அல்லாதோர் கட்சியில் இல்லையா?

2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் சமயத்தில் இஸ்லாம் அல்லாதோரை பாஸ் கட்சி சேர்த்துக்கொண்டதை மறுக்கப் போகிறதா? அல்லது 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி ஆர்.குமுதா என்ற இந்திய வேட்பாளரை நிறுத்தியதைத் தான் மறுக்கப்போகிறதா? என்று கர்பால் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதசார்பற்ற கட்சியாக பாஸ் விளங்குவதற்கு அதில் இஸ்லாம் அல்லாதோரையும் இணைத்துக்கொள்வது மிகச் சிறந்த வழி என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் சலாஹுதின் ஆயுப் கூறியதை கர்பால் சிங் சுட்டிக்காட்டினார்.

மேலும், இஸ்லாம் அல்லாதோருக்கும் கட்சியில் இடமுண்டு என்பதை பாஸ் நிரூபிக்க வேண்டும் என்பதையும் கர்பால் சிங் வலியுறுத்தினார்.

‘தி ஹெரால்ட்’ கத்தோலிக்க வார இதழில் அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற தீர்ப்புக்கு ஆதரவாக இருக்குமாறு வழக்கறிஞர் மன்றத்தை, இஸ்லாம் வழக்கறிஞர் மன்றம் (Muslim Lawyers Association) அச்சுறுத்தியதை பற்றியே தான் விமர்சனம் செய்ததாக கர்பால் சிங் ஒப்புக்கொண்டார்.

கடந்த செவ்வாய்கிழமை பினாங்கில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில், எல்லா இனம் சார்ந்த கட்சிகளின் பதிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கர்பால் சிங் தெரிவித்ததாக அரசாங்க செய்தி நிறுவனமான பெர்னாமா செய்தி வெளியிட்டது.

இதனால் கர்பால் சிங் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜசெக விற்கு எதிராக பாஸ் தலைவர்கள் குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.