கோலாலம்பூர், நவ 18 – பாஸ் கட்சியின் பதிவை இரத்து செய்ய வேண்டும் என்று தான் கூறவில்லை என்று கர்பால் சிங் அறிவித்தாலும், அவர் இன்னும் 5 நாட்களுக்குள் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும் என்று பாஸ் கட்சியின் இளைஞர் அணியின் உதவித் தலைவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பாஸ் இளைஞர் அணி இவ்விவகாரத்தை கட்சியின் இஸ்லாமிய குழுவிடம் கொண்டு செல்லும் என்று அதன் உதவித் தலைவர் ராஜா அகமட் இஸ்கண்டார் ராஜா யாகோப் உத்துசான் மலேசியாவில் இன்று தெரிவித்துள்ளார்.
அதே போல், கிளந்தான் மாநில பாஸ் இளைஞர் அணியின் துணைத் தலைவர் முகமட் ஹாபிஸ் மூசா கூறுகையில், “கர்பாலுக்கு எதிராக ஜசெக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாஸ் கட்சியின் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஓமார் கூறுகையில், கர்பால் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அவர் பேசிய கருத்து காணொளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்பால் பாஸ் கட்சியை மட்டும் காய்ப்படுத்தவில்லை. இவ்விவகாரத்தில் லிம் கிட் சியாங்கையும் தலையிட வைத்து ஜசெக விற்கும் அவப்பெயரைத் தேடித் தந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.