புதுடெல்லி, நவம்பர் 11- இலங்கை தலைநகர் கொழும்புவில் 53 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் மாநாடு நேற்று தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக உள்நாட்டு போர் நடந்தது. இந்த போரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்து ராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளதால், அந்த மாநாட்டுக்கு செல்லக்கூடாது என்று தமிழகம் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நடக்கும் இந்த காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் அனைத்தும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்வாரா என்பது உறுதிசெய்யப்படாமல் இருந்தது. தற்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வரும் 15-ம் தேதி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதமானது இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் ராஜபக்சேவுக்கு அனுப்பிவைக்கப்படும். இந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
பிரதமர் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் எடுத்த முடிவையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த்தில் கலந்துகொள்ளும் முடிவை மாற்றியுள்ளார்.