Home தொழில் நுட்பம் ‘சொற்பிழை திருத்தம்’ உள்ளிட்ட புதிய வசதிகளுடன் ஆண்டிராய்டுகளுக்கான செல்லினம் 2.0 வெளியீடு!

‘சொற்பிழை திருத்தம்’ உள்ளிட்ட புதிய வசதிகளுடன் ஆண்டிராய்டுகளுக்கான செல்லினம் 2.0 வெளியீடு!

783
0
SHARE
Ad

Sellinam_New_Icon_512x512நவம்பர் 12 – திறன்பேசிகளில் (Smart phone) தமிழை உள்ளீடு செய்யும் செல்லினம் என்ற செயலியை அறிமுகப்படுத்திய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம்,இன்று முதல் ஆண்டிராய்டுகளுக்கான செல்லினத்தின் இரண்டாம் பதிப்பை (Version 2.0) பொதுப் பயனீட்டிற்கு அறிமுகப்படுத்துகின்றது.

இந்த இரண்டாம் பதிப்பில் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஏற்கனவே உள்ள சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுள் சொற்பிழை தவிர்த்தல் (auto-correction) என்ற புதிய வசதி இதுவரையிலும் வேறு எந்த ஒரு தமிழ் உள்ளீடு செயலிகளிலும் இல்லாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கருவியில் தட்டச்சு செய்யும் போது இட நெருக்கடிகள் காரணமாக அடிக்கடி ஏற்படும் பிழைகளை தானாக சரி செய்யும் வகையில் இந்த சொற்பிழை தவிர்த்தல் வசதி செய்யப்பட்டுள்ளது.

முரசு அஞ்சல், செல்லினம் போன்ற செயலிகளின் தொழிநுட்ப வடிவமைப்பாளரான முத்து நெடுமாறன் (படம்) அவர்கள் கூறுகையில், “நாங்கள் செல்லினத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து உலகம் முழுவதிலும் மக்களிடையே தமிழ் உள்ளீடு குறித்த மிகப்பெரிய ஆர்வைத்தைக் காண முடிந்தது. உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் உள்ள ஆண்டிராய்டு கருவிகளில் செல்லினம் அதிவேகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டது. மக்களிடமிருந்து கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு, எங்களை செல்பேசிகளில் தமிழை இன்னும் எளிதாக உள்ளிடுவதற்குத் தேவையான பல வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் செய்யத் தூண்டுதலாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆண்டிராய்டு பயனர்களிடையே செல்லினம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. அவர்கள் இதை உயர் அம்சங்கள் அடங்கிய, பயன்படுத்துவதற்கு எளிதான ஒரு உலகத் தரம் வாய்ந்த செயலியாகப் பார்க்கிறார்கள். கூகுள் பிளே ஸ்டோரில் செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்யும் பயனர்கள் மகிழ்ச்சியோடு தங்கள் பாராட்டுகளையும் பதிவு செய்கின்றனர். ஆண்டிராய்டுகளில் பயன்படுத்தும் தமிழ் உள்ளீடு மென்பொருட்களில் செல்லினம் மிகச் சிறந்தது என்று கருத்துத் தெரிவிக்கின்றனர். வார்த்தைகளை முன்னறிவிக்கும் உள்ளீடு முறையை (predictive text input) மிகவும் விரும்புகின்றனர். எனவே அவர்களை மேலும் மகிழ்விக்க தமிழ் உள்ளீடு முறையை வேறு பரிமாணங்களுக்கு கொண்டு செல்ல எண்ணினோம். அதைத் தான் தற்போது வெளியிடவிருக்கும் புதிய பதிகையில் செய்திருக்கின்றோம்” என்றும் முத்து நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.ProfilePicture

செல்பேசிகளில் தமிழை உள்ளிடும் செல்லினம் அஞ்சல் மற்றும் தமிழ்99 என்ற இரண்டு விசைப் பலகைகளைக் கொண்டுள்ளது. அதோடு ஆங்கிலம், குறியீடுகள், எண்கள் மற்றும் மின்னஞ்சல், இணைப்பு (URLs) செய்யத் தேவையான சிறப்பு விசைப்பலகைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

உதாரணமாக, அஞ்சல் விசைப்பலகையை பயன்படுத்தும் போது, ‘நா’ என்ற நெடில் எழுத்தைக் கொண்டுவர ‘SHIFT’ என்ற பொத்தானை அழுத்தி, பின்னர் ‘N’ என்ற விசையை அழுத்தத் தேவையில்லை. மாறாக பயனர் நேரடியாக ‘N’ விசையின் மீது சில நொடிகள் நீண்ட அழுத்தம் கொடுத்தால் போதுமானது.

முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் கடந்த 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த சிக்கலான எழுத்து முறைமைகளுக்குத் தேவையான உள்ளீடு முறைகளையும், எழுத்துக்களையும் கண்டறிந்தது.

அவ்வாறு கண்டறியப்பட்ட எழுத்துக்களுக்கும், உள்ளீட்டு முறைகளுக்கும் உலகின் முக்கிய இயங்கு தள விற்பனையாளர்களும், கருவி தயாரிப்பாளர்களும் தகுந்த அங்கீகாரம் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.