பெட்டாலிங் ஜெயா, நவ 13 – அச்சு ஊடகங்களின் (Print Media) ஆசிரியர்களும், பத்திரிக்கையாளர்களும் இணையவழி ஊடங்களை ஏற்றுக் கொண்டு அதற்காகத் தங்களை அதிரடியாக மாற்றிக் கொள்ளும் மனநிலையை பெற வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் நேற்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
இணைய வழி ஊடகங்களின் மூலமாக சந்திக்கும் புதிய சவால்களை எதிர்நோக்க அச்சு ஊடகங்கள் அனைத்தும் தங்களை மொத்தமாக மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கின்றார்கள் என்று சிங்கப்பூரின் பிரபல தி ஸ்டெரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியரான வாரென் ஃபெர்னாண்டஸ் குறிப்பிட்டுள்ளார்.
கோலாலம்பூரில் நேற்று நடந்த டிஜிட்டர் மீடியா ஆசியா மாநாட்டில் கலந்து கொண்ட ஃபெர்னாண்டஸ், “ஊடகங்கள் தங்களை பெருக்கிக் கொள்வதற்கோ, ஏற்றுக்கொள்வதற்கோ அதற்கென்று தனியாக எந்த ஒரு சூத்திரமும்(Formula) இல்லை. ஒவ்வொருவரும் தங்களின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து அதற்கேற்றார் போல் தங்களை மாற்றிக்கொண்டு, இந்த டிஜிட்டல் காலத்தையும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்” என்று கூறினார்.
மேலும், அச்சு ஊடகங்கள் கட்டாயமாக இணைய வழி ஊடகங்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அப்போது தான் அவை தங்களது வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார்.
“வயதானவர்கள் இப்போது வரை அச்சு ஊடகங்களையே விரும்புகின்றனர். ஆனால் இளம் தலைமுறையினர் தங்களது ஐபேட் மற்றும் ஐபோனிலேயே செய்திகளைப் படிக்க விரும்புகின்றனர்” என்றும் ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர்கள் இரண்டு விதமான வாசகர்களுக்காக செய்திகள் எழுத வேண்டியுள்ளது. ஒன்று உடனடியாக ஐபேட் மற்றும் ஐபோனில் படிக்கும் வாசகர்களுக்கு கொஞ்சம் சுருக்கமாகவும், இரண்டாவது மறுநாள் அச்சு ஊடகங்களின் மூலமாகப் படிக்கும் வாசகர்களுக்கு சற்று விரிவாகவும் செய்திகளை வழங்க வேண்டும் என்றும் ஃபெர்னாண்டஸ் குறிப்பிட்டார்.