போர்ட் லூயிஸ்,நவ 13- இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து அங்கு நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்திய பிரதமர் பங்கேற்க மாட்டார் என்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவை பின்பற்றி இப்போது மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திரா ராம்கூலமும் தான் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிவித்தார். அடுத்த காமன்வெல்த் மாநாடு மொரீஷியசில் 2015–ம் ஆண்டு நடைபெற உள்ளது.
எல்லாவற்றையும் விட மனித உரிமைகள் தான் மிகவும் முக்கியம் என்றும் நவீன் சந்திரா கூறினார். இலங்கையில் நடைபெற்று வந்த மனித உரிமை நிலைமைகளை தான் உன்னிப்பாக கவனித்து வந்ததாலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
1968–ம் ஆண்டு மொரீஷியஸ் சுதந்திரம் பெற்ற பின்னர் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் முதல் பிரதமர் இவர் தான். ஆனாலும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அர்வின் பூலெல் மாநாட்டில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொரீஷியஸ் மக்கள் தொகையில் 10 சதவீதம் தமிழர்கள் வசிக்கிறார்கள். அங்குள்ள தமிழர்களின் பிரதிநிதி மேனன் மார்டே பிரதமரின் முடிவை வரவேற்றுள்ளார். கனடா இந்த மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிப்பது குறிப்பிடத்தக்கது.