புது டெல்லி, நவ 13- இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட போரில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ராஜபக்சே அரசின் போர்க்குற்ற நடவடிக்கை குறித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் கடுமையான தாக்குதல் தொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் ஏற்கனவே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள மாட்டார் என்று, கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது. வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் இந்திய குழு மாநாட்டில் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் நேற்று மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் நிலவும் பலத்த எதிர்ப்பையும் மீறி, மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை செல்கிறார்.
5 நாள் அரசு முறை பயணமாக, டெல்லியில் இருந்து அவர் இன்று கொழும்பு புறப்பட்டுச் செல்கிறார். 15-ந் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறும் காமன்வெல்த் நாடுகள் மாநாட்டிலும், அதைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளிலும் சல்மான் குர்ஷித் பங்கேற்கிறார்.