இதைத் தொடர்ந்து புதிய அதிபராக உயிரியல் விஞ்ஞானி அமீனா குரிப்- பாகிமினை பிரதமர் சர் அனிரூத் ஜெகனாத் அறிவித்தார். இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி தீவு மொரீசியஸ், பணக்கார நாடான இங்கு, 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு கரும்பு அதிகம் விளைவதால் சர்க்கரை ஆலைகள் அதிகம். அதனால் இங்கிருந்து சர்க்கரை அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. மொரீசியஸின் அதிபராக ‘ஆக கைலாஷ் புர்யாக்’ பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் பதவி விலகினார்.
அதை தொடர்ந்து புதிய அதிபராக அமீனா குரிப்-பாகிம் அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் இவர் மொரீசியஸின் முதல் பெண் அதிபர் என்ற பெருமை பெறுகிறார்.
அமீனா குரிப்-பாகிம் பிரபலமான விஞ்ஞானி ஆவார். கைலாஷ் புர்யாக் ராஜினாமா ஏற்கப்பட்டவுடன் இவரை புதிய அதிபராக பிரதமர் சர் அனிருத் ஜெகனாத் அறிவித்தார்.
சர் அனிருத் ஜெகனாத் கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமராக பதவி ஏற்றார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமீனா குரிப்-பாகிமை அதிபர் ஆக்குவதாக அவர் வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி அவர் குடியரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் தொடர்பாக மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அமீனா குரிப் பாகிமினுக்கு ஆதரவாக பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்தனர். அவரது நியமனத்துக்கு நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்திருப்பதால் இன்று அவர் முறைப்படி பதவியேற்கிறார்.