கோலாலம்பூர், ஜூன் 6 – மலேசிய படம் ஒன்றின் குறுந்தட்டு வெளியீட்டிற்கு, ரசிகர்களின் மத்தியில் இவ்வளவு பெரிய ஆதரவும், படம் பற்றிய எதிர்பார்ப்புகளும் நிலவும் என்பதை கடந்த ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற ‘வேற வழி இல்ல’ திரைப்படத்தின் குறுந்தட்டு வெளியீட்டில் காண முடிந்தது.
மிட்வேலி வணிக வளாகத்தில் நடைபெற்ற 13 வது அனைத்துலக இந்தியத் திருவிழாவுடன் இணைந்து இந்த ‘குறுந்தட்டு வெளியீட்டு’ விழா நடைபெற்றது. மலேசியாவின் உச்ச நட்சத்திரங்களும், ஊடகங்களைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் பங்கேற்க, முன்னாள் துணை அமைச்சர் டத்தோ மேக்லின் டி குரூஸ் தலைமையில் கோலாகலமாக படத்தின் இசை வெளியிடப்பட்டது.
இவ்விழாவில், அஜண்டா சூரியா கம்யூனிகேசன் நிறுவனர் ஜெகராவ், டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர், டத்தோ ஷாஷாஸ்ரீ, டத்தோ குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
‘வெட்டிப்பசங்க’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வீடு புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘வேற வழி இல்ல’ புதிய திரைப்படத்தை பிரேம்நாத் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் டெனிஸ், ஜாஸ்மின், விகடகவி மகேன், ஆல்வின் மார்ட்டின் உள்ளிட்ட முன்னணி மலேசிய நட்சத்திரங்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களோடு தமிழக நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர்.
இவ்விழாவில் பேசிய டத்தோ மேக்லின், தமிழகப் படங்களுக்கு ஈடாக இந்த படத்திற்கும் மலேசிய ரசிகர்கள் ஆதரவு வழங்க வேண்டும். அப்போது தான் மலேசியக் கலைத்துறையில் மேலும் இது போன்ற சிறந்த படங்கள் தொடர்ந்து வெளி வரும் என்று கேட்டுக்கொண்டார்.
படத்திற்கு டேடி ஷேக் இசையமைத்துள்ளார். அவருடன் சைக்கோ மந்த்ரா, ஸ்டைலோ மன்னவன், குயின், விவேக் ஜி, மணி வில்லன்ஸ் ஆகியோரும் இணைந்துப் பணியாற்றியுள்ளனர்.
இவ்விழாவில், இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ள அத்தனை கலைஞர்களுக்கும் மேடையில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்தியா -மலேசியா கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 2-ம் தேதி முதல் மலேசியத் திரையரங்குகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டுத் திரையரங்குகளிலும் வெளியிடப்படவிருக்கின்றது.
மின்னல் பண்பலை அறிவிப்பாளர் ரவின் ஷண்முகம் மற்றும் அஸ்ட்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த சுஷ்மா ஆகியோர் சிறப்பான முறையில் நிகழ்ச்சியை வழி நடத்த, அரங்கில் வெளியிடப்பட்ட பாடல் முன்னோட்டங்களை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
செய்தி: ஃபீனிக்ஸ்தாசன்
படம்: ரமேஷ் காசி, வீடு புரோடக்சன்ஸ் பேஸ்புக்.