புதுடெல்லி, ஜூன் 6 – அமெரிக்காவில் நடைபெற உள்ள இளையோர் வி்ல்வித்தை அணிக்கு அமெரிக்கா விசா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வரும் 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையில் ‘இளையோர் சாம்பியனஷிப் வில்வித்தை போட்டி’ நடைபெற உள்ளது.
இந்த போட்டியை அமெரிக்க வில்வித்தை கூட்டமைப்பு ஏற்று நடத்துகிறது. இந்த போட்டியில் இந்தியாவும் பங்கு பெற அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட இந்திய வில்வித்தை கூட்டமைப்பு அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தது.
இந்த பயிற்சியில் அசாம், ஜார்கண்ட், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த இளம் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என மொத்தம் 30-க்கும் மேற்பட் டோர் அமெரிக்கா செல்ல தயாராகி, பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே இவர்கள் அனைவரும் அமெரிக்கா செல்வதற்காக விசா கேட்டு விண்ணப்பித்தனர். இதில் 7 வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் மற்றும் இந்திய விளையாட்டுத்தறை ஆணைய அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே விசா கிடைத்துள்ளது.
மீதமுள்ள 20 வீரர்கள் மற்றும் கொரிய பயிற்சியாளர் சே வோம் ஆகியோர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டியில் இந்தியா பங்கேற்பது கேள்விக்குறியதாகி உள்ளது.
இது குறித்து இந்திய வில்வித்தை கூட்டமைப்பு பொருளாளர் வீரேந்தர் சச்தேவா கூறுகையில்: “வீரர்களின் பதிலால் திருப்தியடையாத விசா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசா தர மறுப்பு தெரிவித்திருக்கலாம்”.
“மேலும் இப்பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறையிடம் முறையிடப்படும்” எனவும் கூறினார். விசா மறுக்கப்படும் பட்சத்தில் மூன்று மாத பயிற்சிகள் வீணாக போய்விடும் நிலை ஏற்படும் எனவும் கூறினார்.