Home உலகம் வெளிநாடுகள் எங்களை நிர்பந்திக்கக் கூடாது: இலங்கை அதிபர் ராஜபக்சே கோபம்

வெளிநாடுகள் எங்களை நிர்பந்திக்கக் கூடாது: இலங்கை அதிபர் ராஜபக்சே கோபம்

574
0
SHARE
Ad

rajapaksa 300-200

கொழும்பு, நவம்பர் 18- போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வெளிநாடுகள் எங்களுக்கு உத்தரவிட முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே மீண்டும் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரின்போது, ஏராளமானவர்கள் உயிருடன் பிடித்து செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சரணடைந்த விடுதலைப்புலிகள் மனிதாபிமானமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவங்களுக்கு ஆதாரமான வீடியோ காட்சிகளை சேனல்&4 தொலைக்காட்சி வெளியிட்டு சர்வதேச கவனத்தை கவர்ந்தது.இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 3 நாட்களாக காமன்வெல்த் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், திடீரென யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்று தமிழர்களிடம் பேசினார்.

#TamilSchoolmychoice

ராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் பத்திரிகை அலுவலகத்துக்கும் அவர் சென்றார்.பின்னர், இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசிய அவர், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக சுதந்திரமான தனி அமைப்பை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்; மார்ச் மாதத்துக்குள் இதை செய்யாவிட்டால், ஐ.நா. சபை மூலம் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தப்படும் என்றும் எச்சரித்தார்.காமன்வெல்த் மாநாட்டின் கடைசி நாளான நேற்று வெளிநாட்டு தலைவர்களுக்கு பிரியாவிடை அளித்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு ராஜபக்சே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:வடக்கு பகுதியில் புணர்வாழ்வு, மறுகட்டமைப்புக்கு போதுமான அவகாசம் தேவை.

இதற்கு எந்த கால நிர்ணயமும் செய்ய முடியாது.இலங்கைக்கு என்று சட்ட முறையும், அரசியல் சாசனமும் உள்ளன. இதன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு சில காலம் ஆகலாம்.வடக்கில் உள்ள மக்களின் மனநிலையில் மட்டுமின்றி, தெற்குப்பகுதியில் வசிக்கும் மக்களிடமும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். 30 ஆண்டுக்காலம் பிரச்னை இருந்துள்ளது.இதனால் தமிழர்கள் மட்டுமின்றி, சிங்களர்களும், முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கவனிக்க வேண்டியது என் பொறுப்பு. இதற்காக ஒரு வாரம், 3 வாரம், 4 வாரம் என்று காலக்கெடு விதிப்பது நியாயமானது அல்ல.

 

எங்களிடம் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். எங்களுக்கு உதவுங்கள் என்றுதான் கேட்கிறோம். ஆனால், எந்த நாடும் விசாரணைக்காக எங்களை உத்தரவிட முடியாது. விசாரணைக்காக நாடாளுமன்ற குழுவை ஏற்படுத்தி உள்ளோம். அதில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர். எங்களுக்கு போதுமான அவகாசம் தேவை.

காமன்வெல்த் அமைப்பின் மதிப்பையும், மனித உரிமையையும், ஊடகச் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். இதற்காகத்தான் நாங்கள் வடக்கு மாகாணத்தில் தேர்தலையும் நடத்தினோம். விசாரணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் தீர்வை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளோம். ஒற்றை நபரால் இதை செய்ய முடியாது.இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

இலங்கை மனித உரிமை அமைப்பை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் இந்த மாநாட்டில் தீர்மானமாக இயற்றப்பட்டன.ஆஸ்திரேலிய பிரதமர், டோனி அபோட் காமன்வெல்த் அமைப்பின் தலைமை பதவியை இலங்கையிடம் ஒப்படைத்தார். அடுத்த காமன்வெல்த் மாநாடு மொரீஷியஸ் நாட்டில் நடைபெற இருந்தது. ஆனால், இலங்கையின் மனித உரிமை மீறலை காரணம் காட்டி இந்த மாநாட்டை புறக்கணித்ததால், அடுத்த மாநாடு ஐரோப்பிய நாடான மால்டாவில், 2015ல் நடைபெற உள்ளது.