திருவண்ணாமலை, நவ 18– திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூதஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 8 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரஅண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்டது.
மகாதீபம் ஏற்றபடுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கபட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை செய்யபட்டது. அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்க்கப்பட்டு அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.
பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டுவரபட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக காட்டப்பட்டது. அப்போது பக்திகோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
அதன் பின் பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லபட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.
மகாதீபம் ஏற்றுவதை முன்னிட்டு கோவிலில் சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடி கோவில் கொடிமரம் முன்பு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக 6 மணிக்கு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவிலில் உள்ள பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோ கரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
கிரிவல பாதையில் 14 கிலோ மீட்டர் முழுவதும் நிறைந்து வழியும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்கினார்கள். மகாதீபம் ஏற்றியதும் திருவண்ணாமலை நகர் சுற்றுபுற கிராமங்களில் விளக்கேற்றி மலையை நோக்கி வழிப்பட்டனர்.
மேலும் மகாதீபம் ஏற்றிய பிறகு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மின்விளக்கு ஏற்றினர். வீடுகள் மட்டுமின்றி தெருக்களிலும் பொதுமக்கள் அகல் விளக்கு ஏற்றினார்கள். திருவண்ணாமலை நகர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.