பீஜிங், நவம்பர் 19- இலங்கையில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சார்பில் குரல் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கையின் நட்பு நாடான சீனாவும் முதன்முதலாக இலங்கை மனித உரிமை பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ளது. சீனா வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கியின் காங் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்வேறு நாடுகளில் உள்ள பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மாறுபட்டதாக இருக்கிறது.
எனவே இதில் முக்கியமானது என்னவென்றால், உலகின் மற்ற நாடுகள் இலங்கைக்கு அனுகூலமான உதவிகள் வழங்கும்போது, இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அந்த மாநாட்டில் எழுப்பிய பிரச்சினைகள் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூடும் ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படுமா? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், இது காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ள ஒரு பிரச்சினை. ஆனால் அதேசமயம், மனித உரிமைகள் பிரச்சினை தொடர்பாக நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளும், தகவல் தொடர்புகளும் அதிகரிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
மனித உரிமை பிரச்சினைகள் குறித்து உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தை மற்றும் தகவல் தொடர்புகள் மூலம் பரஸ்பர புரிதல் ஏற்பட வேண்டும். இது சர்வதேச மனித உரிமைகளை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவும் என்று நாங்கள் எப்போதும் கூறிவருகிறோம் என்று கியின் கூறினார்.
இலங்கையின் மனித உரிமை பிரச்சினை குறித்து சீனா கருத்து கூறியிருப்பது இதுவே முதல்முறை. இலங்கைக்கு சீனா பில்லியன் டாலர் கணக்கில் உதவிகள் புரிந்து வருகிறது.
இலங்கை இறுதி போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தபோது கூட, சீனா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது. ஆனால் இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.
காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக இல்லாதபோதும், கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டு கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியை சீனா வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.