Home நாடு இனி, ரோஸ்மா தனி விமானங்களில் பயணிக்கலாம் ஆனால்…

இனி, ரோஸ்மா தனி விமானங்களில் பயணிக்கலாம் ஆனால்…

634
0
SHARE
Ad

Datin-Seri-Paduka-Rosmah-Mansorகோலாலம்பூர், நவ 19 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர், வெளிநாட்டுப் பயணங்களுக்கு உயர் ரக தனி விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து  நாடாளுமன்றத்தில் நேற்று கடும் விவாதம் நடைபெற்றது.

பிரதமர் துறை அமைச்சர் சாஹிடன் காசிமை, பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்துவிட்டனர்.

ரோஸ்மா மன்சோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பயன்படுத்தும் தனி விமானங்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமானவை என்றும், அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே அவரது பயணங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்றும் சாஹிடன் விளக்கமளித்தார்.

#TamilSchoolmychoice

“அமைச்சரவையில் இருந்து அவர் அனுமதி வாங்க வேண்டும். அவரது பயணம் முக்கியமானதாகக் கருதப்பட்டால் மட்டுமே நாங்கள் தனி விமானத்தைப் பயண்படுத்த அனுமதிப்போம்” என்று சாஹிடன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி, பிரதமர் அமைச்சரவையை அமைக்கும் போதே இதையெல்லாம் முடிவு செய்யப்பட்டுவிட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சாஹிடன், “மலேசியாவைப் பிரதிநிதித்து பிரதமரின் மனைவி செல்கிறார். எனவே அவரை அனுமதிப்பது இந்த நாட்டின் விருப்பம்” என்று தெரிவித்தார்.

மேலும், ரோஸ்மா வழக்கமாக அனைத்துலக அளவில் நடக்கும் திருமண விழாக்களில் கலந்து கொள்ள மலேசியாவைப் பிரதிநிதித்து செல்வார் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும்,“ரோஸ்மா திருமண விழாக்களில் கலந்து கொள்வது மட்டும் பிரச்சனை அல்ல, வெளிநாட்டு முக்கியப் பிரமுகர்களுடன் தன் கணவர் பங்கு கொள்ள வேண்டிய இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொள்கிறார். முன்னாள் அமெரிக்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மலேசியாவிற்கு வந்திருந்த போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரோஸ்மா கலந்து கொண்டார்” என்று அஸ்மின் தெரிவித்தார்.

“அந்த நேரத்தில் பிரதமர் உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அவருக்குப் பதிலாக துணைப்பிரதமர் கலந்திருக்கலாமே? ஏன் ரோஸ்மா கலந்து கொண்டார்?” என்று அஸ்மின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் ஏதும் தெரிவிக்காத சாஹிடன், தனது முந்தைய அறிக்கையை பார்க்குமாறு பதிலளித்தார்.

சமீபகாலமாக நஜிப்பின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து பக்காத்தான் உறுப்பினர்கள் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.

அண்மையில், சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் நஜிப் இதுவரை 339 இடங்களுக்கு செல்வதற்கு, 372 முறை தனி விமானங்களைப் பயன்படுத்தியதற்கு ஆன செலவு 182 மில்லியன் என்று சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தனி விமானங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நஜிப், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹுசின் லூங் போல் குறுகிய பயணங்களுக்கு வர்த்தக விமானங்களைப் பயன்படுத்தலாமே என்றும் அந்தோணி கருத்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.