கோலாலம்பூர், நவ 23 – பிரதமர் நஜிப் துன் ரசாக் உடன் இன்றி அவரது மனைவி மட்டும் அரசாங்கத்திற்கு சொந்தமான ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி கத்தார் சென்று வந்தது ஒன்றும் முதல் முறையல்ல என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ளார்.
“இது முதல் முறையாக நடக்கவில்லை. அது பற்றிய மேலும் பல தகவல்களைத் திரட்டி வருகின்றேன்” என்று செய்தியாளர்களிடம் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
மேலும் ரோஸ்மாவின் இந்த பயணம் இரண்டு விவகாரங்களை எழுப்பியுள்ளது – பிரதமரின் மனைவி அரசாங்க விமானத்தைப் பயன்படுத்த தகுதியானவரா? மற்றும் அரசாங்க விவகாரங்களில் நஜிப்புக்கு பதிலாக அவர் பிரதிநிதிக்கலாமா? என்றும் அஸ்மின் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த நவம்பர் 10 -14 ஆம் தேதி கத்தார் பயணத்தில், அந்நாட்டு பிரதமரை சந்தித்த ரோஸ்மா, மலேசியா 2014 திட்டத்தைப் பார்வையிட வருமாறு நஜிப் சார்பாக அழைப்பிதல் கொடுத்துள்ளார்.
“அது பிரதமரின் மனைவியின் கடமை அல்ல. எந்த ஒரு அழைப்பாக இருந்தாலும் பிரதமரோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரோ தான் கொடுக்க வேண்டும். எனவே யார் இப்போது வெளியுறவுத்துறை அமைச்சர்?” என்றும் அஸ்மின் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.
“அமைச்சரவை ஒப்புதலோடு தான் ரோஸ்மா பயணம் மேற்கொண்டார் என்று பிரதமர் துறை அமைச்சர் சாஹிடன் காசிம் நாடாளுமன்றத்தில் தற்காத்துப் பேசினார். ஆனால் ஒப்புதல் கொடுப்பதற்கு யார் அமைச்சரவையைக் கூட்டினார்கள் என்றால் அதற்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை. இது அமைச்சரவை விவகாரம் வெளியே சொல்லமுடியாது என்கிறார்” என்றும் அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.
ரோஸ்மா கத்தாருக்கு பயணம் மேற்கொண்டது மலேசியாவைப் பிரதிநிதித்து அல்ல என்றும், அது அவரின் தனிப்பட்ட முறையிலான பயணம் என்றும் அம்னோ கட்சியின் பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸலினா ஓத்மான் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.