நியூயார்க், நவ 19– செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பிய விண்கலம் விண்ணில் பறந்தது.
அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு ஏற்கனவே ‘மார்ஸ் ரோவர்’ (என்டீவர்) என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியை ஆய்வு நடத்த அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது. தற்போது அதன் நிலப்பரப்பு, மலைகள் போன்றவற்றை படம் எடுத்து அனுப்பி வருகிறது.
இந்த நிலையில் தற்போது செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக மற்றொரு விண்கலத்தை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதற்கு மாவென் என பெயரிடப்பட்டுள்ளது.
இது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராயும். இந்த விண்கலம் நாசாவினால் நேற்று அமெரிக்க நேரப்படி மதியம் 1.28 மணிக்கு அட்லஸ் வி–401 ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கேப் கனவரல் மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம் 10 மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை சென்றடையும். அதாவது அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் 22–ந்தேதி செவ்வாயை அடையும்.
மாவென் விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்புக்கு மேல் 6 ஆயிரம் கி.மீ உயரத்தில் ஓராண்டுக்கு சுற்றி வரும். இருந்தாலும் 3 முறை செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்புக்கு 125 கி.மீ தூரம் நெருக்கமாக வந்து ஆராய்ச்சி நடத்தும்.
செவ்வாய் கிரகத்தில் முதல் 100 கோடி ஆண்டுகள் குளிர் மற்றும் வறட்சி தட்பவெப்ப நிலை நிலவியது. அப்போது அதன் மேற்பரப்பு தண்ணீரால் சூழப்பட்டிருந்தது. அதனால் அங்கு நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் விஞ்ஞானிகளுக்கு கிடைத்தது.
தற்போது, அங்கு தண்ணீர் இல்லை. சூரியனால் அவை படிப்படியாக அழிக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற பருவ நிலை மாற்றம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்து இந்த மாவென் விண்கலம் ஆய்வு நடத்த உள்ளதாக நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வு விஞ்ஞானி மைக்கேல் மேயர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மாவென் விண்கலம் 2,450 கிலோ எடை கொண்டது. 37.5 அடி நீளம் உடையது. பார்ப்பதற்கு பள்ளி பேருந்து போன்று உள்ளது.
செவ்வாய் கிரகத்தை அமெரிக்கா கடந்த 1960–ம் ஆண்டு முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதற்காக செவ்வாய்க்கு இதுவரை 21 தடவை விண்கலத்தை அனுப்பியுள்ளது.
அதில், தற்போது அனுப்பபட்டுள்ள மாவென் விண்கலம் மட்டுமே செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய அனுப்பப்பட்டதாகும். செவ்வாய் கிரக ஆய்வில் அமெரிக்கா மட்டுமே முன்னணியில் உள்ளது. ஆய்வில் இதுவரை 70 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.
மற்ற நாடுகள் இதுபோன்ற வெற்றியை பெற முடியவில்லை. ஆனால் ரஷியா மட்டுமே மிக குறைந்த அளவில் வெற்றியை பெற்றுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய இந்தியா கடந்த 2 வாரத்துக்கு முன்பு முதன் முறையாக மங்கன்யான் என்ற விண்கலத்தை செலுத்தியது. அதற்கு முன்னதாகவே, அமெரிக்காவின் மாவென் விண்கலம் அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் 22–ந்தேதி செவ்வாய் கிரகத்தை சென்றடைகிறது.