கோலாலம்பூர், நவ 20 – முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ‘செல்லினம்’ இரண்டாம் பதிகை (Version 2.0), அதன் வாடிக்கையாளர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியதுடன், மேலும் பல புதிய பயனர்களையும் கவர்ந்து வருகின்றது.
செல்லினம் குறித்து இந்தியாவின் முன்னணி இதழ்களுள் ஒன்றான ‘இந்தியா டுடே’ வில் ‘நுனி விரல் தமிழ்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி பின்வருமாறு:-
“என்ன தான் கைப்பேசிகள் அதி திறன்பேசிகளாக முன்னேறினாலும், அதில் ஆங்கிலம் போல தமிழை சரளமாகப் பயன்படுத்த முடியவில்லையே என்று ஏங்கும் அப்பாவித் தமிழ் இனமா நீங்கள்? இதோ வந்து விட்டது செல்லினம் நிறுவனம் வழங்கும் ‘செல்லினம் 2.0’.”
“ஆண்டிராய்ட் திறன்பேசிகளில் (Smart Phones) இதைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்கையில் கிடைக்கும் பல வசதிகள் தமிழில் தட்டச்சு செய்பவர்களுக்கும் கிடைக்கிறது. “அக்டோபர் 2013 இறுதி வாக்கில் செல்லினம் இரண்டாம் பதிகையை 50,000 பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்துவிட்டனர்” என்கிறார் முரசு அஞ்சல் தமிழ் எழுத்துரு முதல் இணையத்தில் தமிழுக்குப் பல வசதிகள் செய்வதில் முனைப்பாக இருக்கும் முத்து நெடுமாறன்.”
“அத்தனைப் பேர் அதில் அப்படி என்னத்தைக் கண்டார்கள் என்கிறீர்களா? இதோ செல்லினம் 2.0 கொண்டுள்ள வசதிகள்: சொற்பிழை தவிர்த்தல், அதிக நொடிகள் அழுத்தினால் எண்களை உள்ளிடும் வசதி. ஒரு சொல்லை அடிக்க முற்படுகையில் அதை ஒத்த கூடுதல் சொற்களை பரிந்துரைத்தல் (இதுக்கே ஒரு ஜே போடலாம்!). இப்படி சில புதிய வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தொடுதிரை கைப்பேசிகள் பரவிவிட்ட இந்தக் காலத்தில் இத்தகைய வசதிகள் தமிழ் தொடு விரல்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது.”
இவ்வாறு ‘இந்தியா டுடே’ இதழில் நாணா என்பவர் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.