புதுடெல்லி, நவம்பர் 26– டைம் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் இணையதளம் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி சிறந்த மனிதர் பெயரை அறிவித்து வருகிறது.
2013–ம் ஆண்டுக்கான சிறந்த மனிதரை தேர்ந்தெடுக்கும் பணியை தற்போது டைம் பத்திரிகை தொடங்கியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரதமர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களை இதற்காக டைம் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. அந்த பிரபலங்கள் பெயர் பட்டியலில் மொத்தம் 42 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய ஜனாதிபதி புதீன், ஜப்பான் பிரதமர் சின்சோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், சிரியா ஜனாதிபதி பஷீர் அகமது, நியூஜெர்சி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி, டூவிட்டர் செயல் அதிகாரி கோஸ்டோலோ, யாகூ செயல் அதிகாரி மாரிசா, போப் பிரான்சிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜ், பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலா ஆகியோரது பெயரும் பட்டியலில் உள்ளது.
42 பேர் கொண்ட இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து குஜராத் முதல்– மந்திரியும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார். இந்திய தலைவர்களில் மக்களை அதிகம் கவர்ந்தவர் என்ற அடிப்படையில் மோடியை அந்த பட்டியலில் சேர்த்ததாக டைம் பத்திரிகை கூறியுள்ளது.
சிறந்த மனிதருக்கான இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து தேர்வாகி இருக்கும் ஒரே தலைவர் நரேந்திரமோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 42 பேர் பெயரும் வெளியிடப்பட்டு இணையதளத்தின் ஓட்டெடுப்பு நடந்து வருகிறது.
இதுவரை பதிவாகி இருக்கும் வாக்குகளில் நரேந்திரமோடி 2650 ஓட்டுக்கள் பெற்று முதல் இடத்தில் முன்னிலை பெற்றுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் மோடிக்கு 25 சதவீத ஓட்டுக்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மோடியை தொடர்ந்து 2–வது இடத்தில் எட்வர்ட் ஸ்னோடென் உள்ளார். அவருக்கு 7 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளது.
அதிக ஓட்டு பெறுபவர் 2013–ம் ஆண்டின் சிறந்த மனிதர் ஆக அறிவிக்கப்படுவார். அடுத்த மாதம் (டிசம்பர்) வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.