கோலாலம்பூர், நவ 28 – வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ம.இ.கா தேர்தலில் 3 உதவித் தலைவர் பதவிகள் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் 96 வேட்பாளர்களும் தங்களது கடைசி நேர பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் 3 உதவித்தலைவர் பதவிகளுக்கு 8 வேட்பாளர்களும், 23 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு 88 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ம.இ.கா வரலாற்றில் இத்தனை பேர் போட்டியிடுவது இது தான் முதல் முறை என்று கூறப்படுகின்றது.
மலாக்காவில் நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலை பிரதமர் நஜிப் துன் ரசாக் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகின்றது.
இது குறித்து டத்தோ சரவணன் கூறுகையில், “கட்சியை நல்ல முறையில் வழி நடத்திச் செல்லும் வகையில் ஒரு குழுவைத் தேர்ந்தெடுப்பது 1500 பேராளர்களின் கைகளில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
மேலும், “வாக்களிப்பதற்கு முன் அவர்கள் அனைவரும் நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். உண்மையாக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு யார் போட்டியிடுகின்றனர் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்றும் சரவணன் தெரிவித்தார்.