கோலாலம்பூர், நவ 29 – நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்படுவது தொடருமானால் தேசிய முன்னணி இந்திய மக்களின் நம்பிக்கையை இழந்து விடும் என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஹிண்ட்ராப் இயக்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, தேசிய முன்னணி அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும். ஆலயங்கள் உடைக்கப்படுவதற்கு முன்னர் ஹிண்ட்ராப் இயக்கத்துடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்” என்றும் வேதமூர்த்தி தெரிவித்தார்.
பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, தேசிய முன்னணியும், ஹிண்ட்ராப் இயக்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்தது. அதில் ஆலய விவகாரங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பத்துமலை வளாகத்தில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற்ற ஹிண்ட்ராப் இயக்கத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய வேதமூர்த்தி, தான் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்தித்ததாகவும், ஹிண்ட்ராப் முன்மொழிந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த அறிக்கை விடுத்து இன்னும் ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில், தேசிய முன்னணி மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் என்று மீண்டும் எச்சரிக்கை விடுவது எதற்காக என்பது கேள்விக் குறியாக உள்ளது.