சென்னை, டிசம்பர் 2- ஜப்பான் மன்னர் அகிடோ, 6 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அவரது மனைவி ராணி மிசிகோவும் உடன் வந்தார். தனி விமானத்தில் டெல்லி வந்த அவர்களை பிரதமர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் ஆகியோர் வரவேற்றனர்.
ஜப்பான் மன்னருடன், முன்னாள் பிரதமர் யோஷிரோ மோரி உள்பட 50 பிரதிநிதிகளும் இந்தியா வந்துள்ளனர். இந்த நிலையில், ஜப்பான் மன்னர் அகிடோ, நாளை மறுநாள் (4-ந் தேதி) 2 நாள் பயணமாக சென்னை வருகிறார்.
அன்று மதியம் சென்னை வரும் அவர், நட்சத்திர ஓட்டலில் மனைவி மற்றும் பிரதிநிதிகளுடன் ஓய்வு எடுக்கிறார். பின்னர், மாலை 4.30 மணிக்கு சென்னை கலாச்சேத்ராவில் நடைபெறும் பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டுகளிக்கிறார். அதனைத் தொடர்ந்து, மீண்டும் நட்சத்திர ஓட்டலில் சென்று தங்குகிறார்.
மறுநாள் (5-ந் தேதி) காலை 10 மணிக்கு கிண்டி சிறுவர் பூங்காவுக்கு ஜப்பான் மன்னர் அகிடோ செல்கிறார். பின்னர், அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு போகிறார். ஜப்பான் மன்னரை வரவேற்கும் கவர்னர் ரோசய்யா, மதிய விருந்தையும் அங்கு அளிக்கிறார்.
அதன்பின்னர், தரமணியில் உள்ள மனநலம் குன்றியோர் மையத்திற்கு ஜப்பான் மன்னர் செல்கிறார். பின்னர், அங்கிருந்து நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பும் அவர், அன்று இரவே தனி விமானத்தில் ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்.
ஜப்பான் மன்னர் சென்னை வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தங்கும் நட்சத்திர ஓட்டல் எது? என்பது பாதுகாப்பு கருதி ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.