பாங்காக், டிச. 3– தாய்லாந்தில் பிரதமர் பதவி விலக மறுத்ததை தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது.
தாய்லாந்தில் பிரதமர் யிங்லக்ஷினா வத்ராவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகின்றனர். போராட்டத்துக்கு சுதீப் தவுகசுபான் தலைமை தாங்குகிறார்.
போராட்டக்காரர்கள் தலைநகர் பாங்காக்கில் உள்ள அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை, குண்டு வீச்சு, ரப்பர் குண்டு வீச்சு மற்றும் தண்ணீர் பீய்ச்சு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலையில், பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா நேற்று திடீரென தொலைக்காட்சியில் தோன்றி பேசினார்.
அப்போது, ‘போராட்டக் காரர்களின் கோரிக்கையை ஏற்று நான் பதவி விலக மாட்டேன். ஏனெனில் அவர்கள் அரசின் சட்டத்துக்கு எதிராக செயல்படுகின்றனர். மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்வுக்காக நான் பாடுபடுகின்றேன். அதையே விரும்புகிறேன்.
அரசியல் சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறேன். எனது அரசு அனைத்து விவகாரங்களிலும் திறந்த புத்தகமாக உள்ளது’ என்றார்.
இதற்கிடையே, போராட்ட குழு தலைவர் சுதீப்புக்கு காவல்துறையினர் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர். கலவரத்தை தூண்டுவதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கலாம்.