Home நாடு “ஆபாசங்களை ஏன் தணிக்கை செய்யவில்லை?” – வல்லினத்திற்கு கேள்வி

“ஆபாசங்களை ஏன் தணிக்கை செய்யவில்லை?” – வல்லினத்திற்கு கேள்வி

810
0
SHARE
Ad

1381843_10200235295519599_1706781973_nகோலாலம்பூர், டிச 06 –  ஒரு படைப்பு என்பது முழுவதுமாக கற்பனையாக இருந்து விடுவதில்லை.உலகின் எங்காவது ஒரு மூலையில் நடந்த ஒரு விஷயத்தை பார்த்தோ, கேட்டோ அல்லது தனது சொந்த வாழ்க்கையில் நடந்தவைகளை ஒப்பிட்டோ, கற்பனைகளை சேர்த்து தான் உருவாக்கப்படுகிறது.

தந்தை மகளுடன் உறவு வைத்துக்கொண்டார், தாய் மகனுடன் உறவு வைத்துக்கொண்டார், கோவில் பூசாரி கற்பகிரகதிற்குள்ளேயே பெண்ணுடன் உறவு வைத்துகொண்டான் என்று உலகில் நடக்கும் பல்வேறு எல்லை மீறிய உறவு சார்ந்த விஷயங்களை செய்தித்தாள்களில் படிக்கின்றோம்.

அது போல் சமூகத்தில் எங்கோ ஒரு சிறுவனுக்கு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அதை தனது சிறுகதையில் தயாஜி(படம்) உருவகப்படுத்தி இருக்கிறார் என்று நினைத்து தான் இந்த கதையை (http://vallinam.com.my/version2/?p=789) ஒரு வாசகனாக முழுவதும் படித்து முடித்தேன்.

#TamilSchoolmychoice

சமூகப் பொறுப்பு மிக்க தேசிய வானொலியில் பணியாற்றும் அவர், வல்லினம் என்ற இலக்கிய சிற்றிதழில் இருக்கும் அவர், சர்ச்சைகுள்ளாகும் என்று தெரிந்தும், அப்படி ஒரு படைப்பை கொடுத்திருகிறார்.

இந்த கதை மூலம் வாசகர்களுக்கு என்னதான் சொல்ல வருகிறார்?

“ஒரு மனநோயாளி தான் செய்த தவறுகளை எண்ணிப்பார்க்கிறான். அதில் அவன் தன் தாயையே தவறாகப் பார்த்தது, நண்பர்களுடன் உறவு, காளியுடன் காதல் என்று தன் அந்தரங்களை நினைவு படுத்திப் பார்க்கிறான். தன்னை காப்பாற்றுமாறு ஒவ்வொருவரிடமும் மன்றாடுகிறான்”

இது தான் நான் புரிந்து கொண்டது.இதை பலரும் பல விதமாகப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

இந்த மையக்கருத்தை உருவகப்படுத்தும் அந்த எழுத்தாளர்.கதையில் பல இடங்களில் மிக ஆபாசமாக, கிளர்ச்சியூட்டும் வகையில் எழுதியுள்ளார்.

சிலை பார்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் பலவிதமான காட்சிகள் கொடுக்கும், அதற்காக சிற்பி ஒவ்வொருவருக்கும் தகுந்த மாதிரி தனித்தனியாக வடிவமைக்க முடியாது என்று வல்லினம் கூறுவதை ஒப்புக்கொள்கிறேன்.

அதே நேரத்தில், தனது சிலை எந்த இடத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்படுகிறதோ அதை மனதில் வைத்து சிலை செதுக்க வேண்டியது அவர் பொறுப்பு என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த கதையை ஆபாசத்தளங்களில் வெளியிட்டால் அது வேறு. வல்லினம் என்ற இலக்கிய இதழில் வெளியிட்டுள்ளது தான் உறுத்துகிறது.

//மிக எளிதாக ஆபாசப் படங்களைப் பார்க்க முடியும் கட்டற்ற இணைய பயன்பாடு குறித்து ஏன் கவலைப்படவில்லை? முதலில் இதற்கான பதிலைத் தேடுங்கள். ஒரு இலக்கியப்பிரதி மட்டும் புனிதமாக இருக்க வேண்டும். மற்ற எல்லாமும் எப்படியும் இருக்கலாம் என நினைக்கிறீர்களா?// – என்று எனது கேள்விக்கு வல்லினம் பதிலளித்துள்ளார்கள்.

பேஸ்புக்கில் ஆயிரம் செக்ஸ் குறித்த மஞ்சள் பத்திரிக்கைகள் வரலாம். அவை நேரடியாக காம எண்ணங்களை படிப்பவர்களுக்கு விதைத்து கிளர்சியூட்டுவதற்காக மட்டுமே தயார் செய்யப்படுகின்றன. நிச்சயம் அதை படிக்கும் ஒரு வாசகன் தான் ஒரு செக்ஸ் கதையைத் தான் படிக்கிறோம் என்று தெரிந்து தான் படிக்கிறான்.

ஆனால் வல்லினம் என்ற பெயரில் வெளிவரும் இலக்கிய சிற்றிதழை வாசிக்கும் ஒருவனுக்கு, அங்கு சொல்ல வரும் கருத்தையும் மீறி இப்படி ஆங்காங்கே சில இடங்களில் கிளர்ச்சியூட்டும் வரிகளை இணைத்திருப்பது எப்படி தெரியும்?

முழு நிர்வாணங்களை விட இது போன்ற அரை நிர்வாணங்கள் தான் மனதில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தும்.

வாசகர்களை அரைக்கிணறு தாண்ட நீங்களும் ஏன் காரணமாக இருக்கிறீர்கள்? உங்கள் கதையை படித்து முடித்தவனுக்கு, அந்த கதையில் வரும் கதாப்பாத்திரம் செய்த தவறால் ஏற்பட்ட விளைவுகள் தான் நினைவில் இருக்க வேண்டுமே தவிர, அவன் செய்த காம விளையாட்டுகள் மட்டும் நினைவில் நிற்கக்கூடாது.

அப்படி செய்திருந்தால் நிச்சயம் அந்த கதை சமூகத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

செக்ஸ் புக் என்னடா? வல்லினத்தில் அதை விட சூப்பரா செக்ஸ் கதைய வர்ணிச்சு எழுதுறாங்க என்று இளைஞர்கள் தேடிப் பிடித்து படிக்கும் நிலைக்கு வல்லினம் தரம் குறைந்து விடக்கூடாது என்பது எனது வேண்டுகோள்.

கதைபடி,  தவறை உணர்ந்து மனம் நொந்து போனவன் தாயிடம் காப்பாற்றுமாறு கூறும் போது அங்கு தான் பார்த்த புளூ பிலிமை விளக்குகிறான்.

அந்த இடத்தில் அவ்வளவு ஆபாசம் ஏன்?

அதை கேள்வி கேட்ட என்னிடம்… //என் வாசிப்பில் எந்தக் கிளர்ச்சியும் இந்தக் கதை ஏற்படுத்தவில்லை. உங்களுக்கு ஏற்படுவதால் நான் என்ன செய்ய முடியும்?// என்று நவீன் பதிலளித்துள்ளார்.

இது என்னிடம் மட்டும் கேட்கும் கேள்வியாக நான் கருதவில்லை. ஒட்டுமொத்த வாசிப்பாளர்களிடம் கேட்கும் கேள்வியாகவே நான் கருதுகின்றேன்.

வல்லினம் என்ற இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் நீங்கள், ஒரு சிறுகதையை வெளியிடுகிறீர்கள். அது உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் போதுமா? வெளியிட்டுவிடலாமா?

அதனால் சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும், வாசகர்கள் அதை எப்படி புரிந்து கொள்வார்கள் என்று ஒருமுறையாவது யோசிக்க மாட்டீர்களா? அந்த சமூகப் பொறுப்பு உங்களுக்கு இல்லையா தோழர்?

எழுத்தாளர் தனது படைப்பில் எல்லை மீறிய காம ரசனைகளைத் தூவி இருந்தாலும், வெளியிடும் நீங்கள் நிச்சயம் அதை தணிக்கை செய்து அல்லவா வெளியிட்டிருக்க வேண்டும்?

அதுமட்டுமின்றி…. கதையைப் படிக்கும் வாசகர்கள் குழம்பி விட மாட்டார்களா? என்று கேட்ட ஒரு வாசகியிடம்…

திருக்குறள், ஆண்டாள், ஔவை பாடல்களில் இருக்கும் காம வரிகளை உதாரணம் காட்டியிருக்கிறீர்கள்…அவர்கள் செய்திருக்கிறார்கள் நாங்கள் செய்தால் என்ன? எங்கள் இதழில் மட்டும் ஏன் புனிதத்தைக் காண்கிறீர்கள்? என்று கேட்கீறீர்கள்.

அப்படியென்றால், பழமையை ஒழித்து நவீனத்தை கொண்டு வர நினைக்கும் நீங்கள் இந்த விஷயத்தில் மட்டும் ஏன் பழமையைப் பின்பற்றி வருகிறீர்கள்?

நீங்களாவது அது போன்ற ஆபாசங்களைத் தவிர்த்து, மக்களுக்கு புரியும் படியாக கதை எழுதலாமே?

திருக்குறளிலும் காமத்துப் பால் இருக்கிறது… அதில் இப்படி அப்பட்டமாக மனித வக்கிரங்களை வார்த்தைகளால் முகம் சுழிக்கும் வகையில் வடிக்கவில்லை. அதனால் தான் காமத்துப்பால் இன்றளவும் போதிக்கப்படுகிறது.

//கணவனை விட காதலனுக்குத்தானே பெண்ணுடம்பில் உரிமை அதிகம்//

இப்படி ஒரு வரி அந்த கதையில் வருகிறது… கதையில் அந்த மனநோயாளி இப்படி கூறுகிறான் சரி…. இந்த கருத்து தவறு என்று அவன் இறுதிவரை உணரவேயில்லையே…

அவன் கதையில் எங்காவது உணர்ந்திருந்தால் படிப்பவர்கள் அது தவறு என்று புரிந்து கொள்வார்கள்..

இந்த வரி சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியதா? யார் கொடுத்தார் இந்த சுதந்திரத்தை?

அப்படியானால், கதையை தணிக்கை செய்யாமல் வெளியிடும் நீங்கள்… சமூகத்திற்கு இந்த கருத்தை முன்மொழிகிறீர்கள் என்று தானே நாங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.

இதற்கு உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று கேட்டேன்.. அதற்கு மனநோயாளியிடம் என்ன நியாயம் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கிறீகள்.

மனித வக்கிரங்களை அப்பட்டமாக எழுத்தில் கொண்டு வர நினைக்கும் நீங்கள் இனி மிக கவனமாக அதை கையாள வேண்டும்.

அதுமட்டுமின்றி…. காலங்காலமாக ஒரு கட்டமைப்புக்குள் இருந்து வரும் இந்த சமூகத்தில், அந்த கட்டமைப்பை மீறிய படைப்புகளை வெளியிடும் போது முடிந்தவரை நம்பிக்கையுள்ளவர்களின் மனம் புண்படும் படியாக, அப்பட்டமாக பொதுத்தளத்தில் வெளியிட வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

ஒருவேளை…. நீங்கள் அப்படிப்பட்ட எல்லை மீறிய கதைகளை வெளியிடுவதாக இருந்தால் தயவு செய்து … கதை வெளியிடும் தளங்களில் ஒரு சிறு குறிப்பாவது அவசியம் ..

இதனால் அந்த வாசகர்கள் அதைப் படித்து வீணாக தங்களை புண்படுத்திக்கொள்ள மாட்டார்கள்….

அப்படி செய்யாமல் தொடர்ந்து நீங்கள் இது போன்ற கதைகளை வெளியிட்டு வந்தால் … நிச்சயமாக மக்கள் வல்லினத்தை தவறாகப் புரிந்து கொள்வார்கள்…படிக்கமாட்டார்கள்…

நீங்கள் மற்ற கட்டுரைகளில் கூறவரும் நல்ல விஷயங்களும் மக்களுக்கு சென்றடையாமல் போய்விடும்.

(பின்குறிப்பு: இன்று காலை முதல் வல்லினம் இணையப் பக்கத்தை பார்வையிட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

– பீனிக்ஸ்தாசன்