கோலாலம்பூர், டிச 06 – கொள்கை குறித்து நேற்று நஜிப் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, தேசிய முன்னணியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று பக்காத்தான் மீண்டும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி, தேசிய முன்னணியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தான் அறிவித்ததாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டார்.
“அரசியல் ஒத்துழைப்பு குறித்தும் இன விவகாரங்கள் குறித்தும் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்றும் அன்வார் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி, சபா மாநிலம் கோத்தா கினபாலுவில் உள்ள பிகேஆர் தலைமையகம் துவக்க விழாவில் பேசிய அன்வார், தன்னையும் சேர்த்து பக்காத்தான் தலைவர்களான ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் ஆகியோர் தேசிய முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், “நாங்கள் பேச்சுவார்த்தை குறித்து விடுத்த அழைப்பையெல்லாம் நிராகரித்தார்கள், அம்னோவுடன் விவாதிக்க விடுத்த அழைப்பையும் மறுத்தார்கள். சீன மக்களுக்கு இன்னும் என்ன வேண்டும்? (apa lagi Cina mahu?) என்று கேட்டார்கள். நான் அம்னோவிற்கு இன்னும் என்ன வேண்டும்? apa lagi Umno mahu? என்று கேட்கிறேன்” என்றும் அப்போது அன்வார் தெரிவித்தார்.
நஜிப் நேற்று வெளியிட்ட கொள்கை குறித்த அறிக்கையில், மற்ற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். அதில் பாஸ் கட்சி மற்றும் பக்காத்தானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் கோடி காட்டினார்.